இப்போது எழுதிய முன்குறிப்பு:
டிசிஎஸ் பெங்களூரில் 2003 திசம்பரில் இணைந்தாலும், குடும்பத்தை அழைத்து வருவதற்கு ஏபரல் 2004 ஆகிவிட்டது. அதற்கு முன்பே பெங்களூரில் வீடு பார்த்ததால், சென்னை வீடு காலியாக்கப்பட்டு, சாமான்கள் எல்லாம் பெங்களூருக்கு வந்துவிட்டன. சென்னையில் சிவா பரீக்ஷை முடியும் வரை, என் மாமா வீட்டில் குடும்பம் இருந்தது. இனி படியுங்கள்.
ஜயநகர் வீட்டில் சாமான்கள் இறக்கப்பட்டவுடன் எனது முதல் கவலை. எனக்கிருக்கும் நேர நெருக்கடியில் இதையெல்லாம் ஒழுங்காய் எடுத்து வைத்து, மாமி/மம்மி முன்னால் ‘எப்படி வாழ்ந்து காட்டுவது?!’
நண்டும் சிண்டுமாய், குட்டி குட்டியாய் அட்டைப் பெட்டி சாமான்கள். புத்தகப் பெட்டிகள் நீங்கலாக மற்றதைப் பிரிக்கத் துவங்கினேன். ஃப்ரிட்ஜைப் பிரித்து, திறக்க முயன்றதில் பூட்டியிருப்பது தெரிய வந்தது. சாவி எங்கே?!!
இடியாப்பச் சிக்கல் நிறைந்த நூல்கண்டை எவ்வளவுக்கெவ்வளவு சாக்கிரதையாக, சாவதானமாகப் பிரித்தெடுக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு அட்டைப் பெட்டிகளைப் பிரிப்பதில் இருந்தது. சூட்கேஸ்களை மேயத் துவங்கியதில் ஆடைகள் வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எடுத்து பீரோவில் அடுக்கி வைத்தேன். மீதமிரண்டு பூட்டப்பட்டிருந்தன! கிச்சன் ஐட்டம்ஸ் நிறைய இருந்தாலும், மேலிடத்து சமாச்சாரம் என்பதாலும் முடிந்தவரை எடுத்துவைத்து விட்டு, பாதியை அப்படியே விட்டுவிட்டேன்.
மாமியுடன் தொலைபேசியதில் ‘சாவி’கள் வைக்கப்பட்ட ரகசிய இடம் தெரிந்துவிட்டது. ஃப்ரிட்ஜ் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சூட்கேஸ்கள் வாய் பிளந்தன. திவான் வழிவிட்டுத் தலையணைகளை ஏற்றுக்கொண்டது.
அலுவலகத்திலிருந்து சொந்தச் செலவில் இரு ஆட்களை வரவழைத்து, ஜன்னல்களைத் துடைப்பது முதல், புத்தக / காலியான பெட்டிகளை மேலே ஏற்றுவது, நாற்காலிகளைச் தூசு தட்டுவது, வீடு முழுதும் பெருக்கித் துடைப்பது, வாசல் கழுவி விடுவது வரை பொறுமையாகவும் அழகாகவும் செய்ததில் ‘சட்’டென வீடு பளிச். கேஸ்/கேபிள் இணைப்புகள் எளிதில் கிடைத்து விட்டன. எஞ்சியிருந்த காரியம் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கிப் போடுவதுதான்.
நண்பர் ராஜ் உதவியுடன் ஃபுட் வோர்ல்ட் சென்றேன். மளிகை/குளியலறை சாமான்கள், சுத்தம் செய்ய வேண்டிய உபகரணங்கள், காய்கறிகள் வாங்கினேன். சின்னச் சின்ன வஸ்துக்களான தீப்பெட்டி, திரி பேட், கற்பூரம் கூட மறக்காமல் வாங்கினேன். ‘பின்னே, மாமி விளக்கேற்றி பால் காய்ச்ச இது கூட செய்யலேன்னா எப்படி?!’ ஆனால், உள்ளூர ஏதோ உதைத்துக் கொண்டேயிருந்தது.
பதினைந்து நாட்கள் மாமா (ஊரில் இல்லை) வீட்டில் தங்கிவிட்டு, வெள்ளி (16/04/2004) காலை அனைவரும் பெங்களூரு வருவதாக ஏற்பாடு. வியாழன் இரவு ‘ஏதாவது விட்டுப்போயிருக்கிறதா?’ என யோசித்தேன். ‘பக்கத்திலேயே இருப்பதால் பால்/தயிர் நாளை வாங்கிக்கொள்ளலாம். குடிக்க டம்ளர் / டபரா ரெடி. கரண்டிகளெல்லாம் வெளியே எடுத்தாகி விட்டது. காஃபி பொடி வாங்கியாகி விட்டது. அடடா! ஃபில்டர் எங்கே?!’ (வீட்டில் காஃபி மேக்கர் உபயோகிப்பது இல்லை!)
விச்ராந்தியாய்ப் படுத்திருந்தவன் விருட்டென எழுந்தேன். கிச்சனில் புகுந்தேன். தேடினேன். பிரிக்கப்படாத இரு பெட்டிகள்..இதில் இருக்குமோ? ‘தேடு..தேடிக்கிட்டே இருங்க’ அரை மணி வியர்த்தமாய்ப் போனது. வியர்வை சுரந்தது. ‘என்னடா இது? இவ்ளோ பண்ணிருக்கோம். இதுல கோட்டை விட்டுட்டோமே!’ ‘இன்ஸ்டெண்ட் காஃபி பாக்கெட் வாங்கலாமா?’ ‘பத்தரை மணிக்கு எவன் தொறந்திருப்பான்?’ ‘நம்ம பொழப்பே திட்டு வாங்கறதுதானே!’ என நொந்து போய்த் தூங்கினேன்.
அதிகாலையில் மதராஸ் மெயிலில் வந்திறங்கிய மாமி, மம்மி கேட்ட முதல் கேள்வி ‘எல்லாம் ஒழுங்கா எடுத்து வெச்சாச்சா?’ நான் அமுக்கமாய் ‘ம்ம்ம்’ என்றேன்.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ‘ எவ்வளவோ தேடிப் பார்த்துட்டேன். காஃபி ஃபில்டர் மட்டும் கெடக்கவேயில்லை’ என்றேன் மெது மெதுவாய்.
‘மாமாவாத்துல ஏது ஃபில்டர்? அதான் நான் அனுப்பாம அங்கியே வெச்சிண்டேன். எங்களோட அதுவும் இப்பதான் பெங்களூரு வர்றது’ என்றாள் அம்மா புன்னகையுடன் நிதானமாக.
1 comment:
:) hahaha! Nice twist at the end!
Post a Comment