Saturday, January 26, 2013

சினிமாவும் நானும்!

திரும்பத் திரும்ப யோசித்தாலும் மிகச் சில விஷயங்கள்தான் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன.

உன்னையும் உன் திறமையையும் நீயே மதிப்பதும் அதில் நம்பிக்கையுடன் இருப்பதும்.

அன்றாடத் தேவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை நிறைவேற்றியபடியே உனது அடுத்த இலக்குக்காக முயல்வதும்.

உன்னை மேலும் மேலும் எக்யுப் செய்துகொண்டு வாழ்வை கவனித்து கவனித்து உனது கலை மனசை கூர்மைப் படுத்திக் கொள்வதும்.

இவை மூன்றும்தான் என்னளவில் அதிமுக்கியமாகப் படுகிறது. ஆனால், இவற்றை விடவும் பெரிதான் ஒன்று உண்டு. இதைக் கற்றுத் தந்தவர் எனது மாமா.

ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சிறு பருக்கை கீழே சிதறி விட்டது. அவர் புன்னகையோடு சொன்னார். ‘இந்தப் பருக்கையோட நிலையைப் பார்த்தியா...பாவம்!’

நான் வியப்பாக ‘ஏன்?’ என்றேன்.

‘இந்தப் பருக்கை எத்தனை இடத்துல தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையிலே, அரிசி களைகையிலே, சாதம் வடிக்கையிலே..அப்படின்னு எத்தனை இடங்கள்! எங்கேயும் தவறாம அதனோட பயனுக்காக எவ்வளவு தூரம் கடந்து வந்துச்சு..இப்ப பாரு சாதமா மாறி உன் கைக்கு வந்து கடைசி நொடியில தவறி விழுந்திடுச்சே..எவ்வளவு பாவம் அது!’

நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரிடமிருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!

நம்முடைய பிறப்பும் அந்த அரிசி போலத்தான். நாமும் எத்தனை இடங்களிலிருந்து தப்பித் தப்பி வாழ்வைக் கடந்து வந்திருக்கிறோம்? நாம் ஒருபோதும் இந்த அற்புதமான வாழ்வை வீணாக்கிவிடக் கூடாது.

கடைசி நிமிடத்தில் தவறிய அந்தப் பருக்கை போல் தவறிப் போனவர்கள்தான் எத்துனையெத்துணை பேர்?

சினிமாவில் பிரபலமடைவதும் பெரிய ஆளாவதும் சந்தோஷமே.

ஆனால், அப்படி ஆகமுடியாது போனால் அது ஒன்றும் பெரிய குறைபாடு இல்லை.

சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது. பெருமையுடையது.

பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.

உன்னை, என்னை உருவாக்கி இப்போது நாமிருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருப்பது வரை உன் பெற்றோர், என் பெற்றோர் உள்ளிட்ட பல பிரபலமற்றவர்களின் பங்கு இருக்கிறது.


இதுவரை கீழே விழாத சோற்றுப் பருக்கையாக நீயும் நானும் இப்போது நாமிருக்கும் இடத்தில் நிற்கிறோம்.

இந்த உதாரணத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்த என் மாமாவும் கூட பிரபலமாகாத ஒரு எளிய விவசாயி தான்!

சினிமாவும் நானும் (இயக்குனர் மகேந்திரன், (மித்ர ஆர்ட்ஸ் & க்ரியேஷன்ஸ் வெளியீடு) புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.