Sunday, January 20, 2013

இசைஞானியும் கவிஞர் வாலியும் - 2

இளையராஜா போட்ட ட்யூன்ல ஒரு லைன் மாதிரி அடுத்த லைன் இருக்காது. சந்தங்கள் உடைந்து இருக்கும்.


ராஜாவோட பல்லவி முதல் வரி 4 சீர் இருக்கும். இரண்டாவது வரி 3 சீர் இருக்கும். மூன்றாவது வரி, இரண்டு சீர் இருக்கும். இதுக்கு பாட்டு எழுதலாம். ஆனா டப்பிங் படத்துக்கு எழுதின மாதிரி இருக்கும். ஆரம்பத்தில நான் கொஞ்சம் தயங்கினாலும் ராஜா சொன்ன காரணத்துக்காக ஏத்துகிட்டு அதில் என் கருத்தை வெச்சேன். தனக்கு ஒரு தனி அடையாளம் வேண்டும் என்பதற்காக ராஜா அதைப் பண்ணினார். அதை நான் பாராட்ட வேண்டும். எந்தக் கலைஞனுக்கும் தனி அடையாளம் வேண்டும் என்கிறதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


தமிழ்நாட்டில் கொல்லூர் மூகாம்பிகையைப் பற்றி யாருக்கும் தெரியாது. அது முதன்முதலா தெரிய ஆரம்பித்தது எம்.ஜி.ஆர் மூலமாகத்தான். மதுரை முத்து எம்.ஜி.ஆருக்கு ஒரு வெள்ளி வாள் தந்தார். அதை எம்.ஜி.ஆர் இந்த மூகாம்பிகை கோயிலுக்குக் கொடுத்தார். அது பேப்பர்ல எல்லாம் வந்தது. அப்புறம் நிறைய பேர் போக ஆரம்பித்தார்கள்.

ராஜாவே தயாரிப்பாளராய் இருந்ததால ஒரு மாலை நேரத்தில் நேரம் காலம் எல்லாம் பார்த்து ஒரு வெள்ளிக்கிழமை விளக்கு வெச்ச பிறகு ஒரு வெள்ளி குத்துவிளக்கை ஏற்றி ட்யூனை வாசித்தவுடன் எழுதியதுதான் ஜனனி ஜனனி. இந்தப் பாட்டு எழுதின பிறகுதான் பாரதிராஜா தன் பெண்குழந்தைக்கு ஜனனின்னு பேர் வெச்சாரு. எனக்கு இஷ்டமான பாட்டுன்னு கேட்டீங்கன்னா இதச் சொல்லுவேன். மூகாம்பிகையினுடைய வரலாறு இருக்கு. இது எனக்கு தெரியாது. ராஜாவும், சங்கரும் எனக்கு எழுதிக் கொடுத்தாங்க.

டைரக்டர் சங்கர் தாய் மூகாம்பிகை பற்றி படம் பண்ணனும்னு இருந்தார். இளையராஜாவும் இந்தக் கோயிலுக்குப் போயிட்டு வருவார். “தாய் மூகாம்பிகை” படத்தை இளையராஜாதான் தயாரிக்க இருந்தார். அப்புறம் சங்கரே தயாரித்து வெளியிட்டார். இந்தப்பாட்டும் ஒரே நாளில் ட்யூன் பண்ணி எழுதியதுதான்.

 
 ஸ்ரீதரின் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படம் முழுவதும் இளையராஜாவின் ஆராதனை இருக்கும். எல்லாப் பாட்டும் நல்லா இருக்கும். அதில் ஹீரோயின் குடிச்சிட்டு தன்னை மறந்து பாடுற மாதிரி ஒரு காட்சி அமைப்பு. அதுக்கு இளையராஜா ‘தானே நானா தானே நானா’னு ட்யூன் சொன்னாரு. அவர் சொன்ன தத்தகாரத்தை வெச்சி அதையே நான் ‘நானே நானா யாரோ தானா’னு எழுதினேன்.

முதல்ல அந்த தத்தகாரத்தையே பொருள் உள்ளதா மாற்றினேன். பல்லவியினுடைய கடைசியில் ’என்னை நானே கேட்கிறேன், நானே நானா..’. இதை ராஜா, ஸ்ரீதர் எல்லாம் அற்புதமான பாட்டுன்னு சொன்னாங்க.

‘அபிஷேக நேரத்தில் அம்பாளைத் தரிசிக்க’னு இன்னொரு பாட்டு. அதில் ராஜாவோட வர்ணமெட்டுல அசந்தேன்னா சரணத்தில் சிம்மேந்திர மத்திமம் பேசும். அந்த ராகத்தினுடைய சகல பாவங்களும் சரணம் முழுக்க இருக்கும். அந்தப் பாட்டு ‘ஹிட்’ ஆச்சி. என்னால மறக்க முடியாத பாட்டு அது.


வாலிப வாலி (நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், விலை ரூ 250) என்கிற புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

No comments: