Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts

Thursday, February 03, 2011

தகப்பன் சாமி!

மகனின் கேள்வி என்கிற தலைப்பில் கவிதையைப் பின்னியிருந்தார் நண்பர் ஜே கே.

இருந்தாலும், உறுத்தல் தாளாமல் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

நண்பா!

இந்தக் கேள்விக்குப் பதில் உன்னுடைய முதல் மூன்று வரிகளிலேயே இருக்கிறது.

முழுதாயிருத்தல் முக்கியமெனில், முதலில் படைத்தல்... படைத்தலைக் காக்கும் திறன் (அ) ஆற்றல்... பின் அழித்தல்.. !

ஆக, அழித்தலை மூன்றாமிடத்தில் வைத்த காரணம் புரிகிறதா? அழிந்து போகும் எனத் தெரிந்தும், ஆற்றல் குறையாமல் இருக்கும் இறைவனிடமே வினாவும் இருக்கிறது, விடையும் கிடைக்கிறது!

இது தெரிந்தால், தெளியும், புயல் வீசும் மனமும் 'ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா...அமைதி தெய்வம் என் மனதில் கோயில் கொண்டதடா..' ஆகிவிடும்!

இந்தக் கவிதையின் புனைவிற்கு 100 மார்க் கொடுக்கலாம்...
ஆனால், பொருளுக்கு...?!

விடுவாரா ஜே கே? உடனே பதில் குத்தியிருந்தார்!

மகனிடம் சொல்லும் போது எதையும் அழிக்கக்கூடாது என்று சொல்கிறோம்; அவன் வயதிற்கு அது மட்டும் தான் புரியும்.

நம் வயதிற்கு அழித்தலும் ஒர் அவசியம் என்று அறிவோம்; மூன்றாம் இடத்தில் வைத்தாலென்ன முதலிடத்தில் வைத்தாலென்ன?

மனிதனாய் பிறந்து நாம் பற்பல் விஷயம் கற்கிறோம். அதில் எங்கேயனும் உடைந்த பொருளையோ அல்லது சிதைந்து போகும் என்று தெரிந்ததையோ வாங்கு , பேணி பாதுகாத்து கொள் என்று இருக்கிறதா , இல்லை!

எது உடையுமோ அதை நாம் தொடுவதில்லை, எது தொடராதோ அதற்கு நாம் செலவழிப்பதில்லை; அப்படியிருக்க அழிவை (முடிவில் அது மட்டும் தானே நிரந்தரம்) தரும் கடவுளுக்கும் , அந்த கடவுளையும் ஏன் நாம் இறைஞ்சுகிறோம்.

பகுத்தறிவாய் யோசித்தால் சற்று புயல் தான் வீசும்; இறைமையுடன் இருந்தால் யோசனை அற்று அவனிடம் தஞ்சம் புக புயலிராது.....!

அழிவிருக்க இறைவனுக்கு ஏங்குவோம், அழிவற்றிருக்க நாமே இறைவனாவோம்!

என் புனைதல் எந்த இடத்திற்க்கு என்பதல்ல, ஏன் என்பதே!

நன்றி நண்பா!



நானா விடுவேன்?!


நண்பா,

அழித்தல் 'அவசியம்' அல்ல நண்பா! அது ஒரு 'இயல்பு'...அவ்வளவே!

இப்படி யோசிப்போம்... அழிவு என்பதின் பொருள் 'அடங்குதல் / மறைதல்' என்றாகவும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொள்ளப்படும்போது, அங்கு 'அழிவு' என்கிற எதிர்மறை சிந்தனை (அப்படி நினைத்தால்) போய், நேர்மறை சிந்தனை உண்டாகிறது. தோற்றுவித்தல், காத்தல், மறைத்தல் இவை அவன் செய்கை எனும்போது அவனை வழிபடுவதில் உறுத்தல் இருக்காது.

எது உடையுமோ, அது நாம் தொடுவதில்லை...
எது தொடராது, அதற்கு நான் செலவழிப்பதில்லை...
இது ஆபத்தான சிந்தனை

நம் சுற்றமும், நட்பும் நோயில் வீழ்ந்து இனி காப்பாற்ற இயலாது எனத் தெரிந்தும், பேணி பாதுகாக்கிறோமே...எதற்கு?

'ஆடி அடங்கும் வாழ்க்கை'-யில் - மிதமாக இருத்தலும், அமைதியாக அடங்குதலும் மிக முக்கியம்...அதற்கு இறைவன் வழிபாடு மிக முக்கியம்...இப்படி யோசித்தால் மகனுக்கும் விடை உண்டு...மவனே! உனக்கும் விடை உண்டு!


பின் நாங்கள் கைப்பேசியில் பேசித் 'தீர்த்து'க் கொண்டோம்!
உங்கள் கருத்து என்ன அன்பர்களே, நண்பர்களே?!