
‘எசமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்...’
என்று இயக்குனர் உதயகுமார் எழுதிய அறிமுகப் பாடலோடு படம் துவங்கும்,
அக்னிசாட்சி (1982) படத்தில் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய ‘கனாக் காணும் கண்கள் மெல்ல’ பாட்டு கேளாதவர்கள் இருக்க முடியாது. அதில் வரும்
நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான் உன் நிழல் விழுந்த
நிலத்தின் மண்ணைக்கூட
என் நெற்றியில் நீறுபோல் திருநீறுபோல்
இட்டுக்கொள்கிறேன்
வரிகளை மறந்திருக்க முடியாது.
முத்தொள்ளாயிரம் என்று ஒரு பாடல் தொகுப்பு உண்டு. இதை எழுதியது யார் என்று தெரியவில்லை. இது சேர, சோழர், பாண்டிய மன்னர்களின் சிறப்பைச் சொல்லும் தொகுப்பு.
அதில் வரும் ஒரு பாடல்
புனவட்டப்
பூந்தெரியல்
பொன் தேர் வழுதி
கனவட்டம்
கால் குடைந்த நீறு
ஆடுகோ
சூடுகோ
ஐதார் கலந்துகொண்டு
நீடு கோடாக ஏடு
எழுதுகோ
வயல்களில் பூத்த மலர்களைத் தொடுத்து,
அழகான வட்ட மாலையாகச் செய்து,
மார்பிலே அணிந்து கொண்ட
பாண்டிய மன்னனைத் தங்கத் தேரில் அழைத்து வரும்
கனவட்டம் என்கிற பெயர் கொண்ட குதிரையின்
கால் பட்டுத் தெறித்த
புழுதியில் புரண்டு ஆடட்டுமா? அல்லது
தலையில் பூவுக்குப் பதிலாகப் புழுதியைச் சூடிக்கொள்ளட்டுமா?
இதோடு நில்லாமல்
தண்ணீரும் நறுமணப் பொருள்களும் கலந்து,
வண்ணக் குழம்பு போல் ஆக்கி,
பூ இதழால் நீளமான தூரிகை செய்து,
தொட்டுத் தொட்டு
என் மார்பில்
அவர் உருவத்தை
ஓவியமாக வரைந்து கொள்ளட்டுமா?
என்று தலைவி உற்சாகத்துடன் பாடுகிறாள்.
ஆடுகோ சூடுகோ ஐதார் கலந்துகொண்டு
ஏடுகோ டாக எழுதுகோ நீடு
புனவட்டப் பூந்தெரியல் பொன்தேர் வழுதி
கனவட்டம் கால்குடைந்த நீறு.
இப்போதைய tattoo-க்கான விதை அப்போதே விதைக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
சில அரிய சொற்கள்
ஐது - அழகு
ஐதா - இளகிய
புனம் - வயல்
ஏடு - பூ இதழ்
கோடு - எழுதும் கொம்பு / தந்தம் (தூரிகை)
பூந்தெரியல் - மலர் மாலை
ஆதாரம் முத்தொள்ளாயிரம், என் சொக்கன் (கிழக்கு பதிப்பகம், ரூ 165) அவர்களைச் சேர்ந்தாலும், என் கைச்சரக்கையும் இணைத்து எழுதப்பட்டது.
No comments:
Post a Comment