Monday, May 01, 2006

திருட்டு விசிடியில் திருட்டு பயலே...






பில்லியனர் கணவனுக்குத் தெரியாத மனைவியின் கள்ளத் தொடர்பு நமக்கு புதிதல்ல; கள்ளத் தொடர்பின் நாயகன் கணவனின் உயிர் நண்பன் நமக்கு புதிதல்ல; இதைப் பார்த்து விட்ட மூன்றாம் நபர் ப்ளாக் மெயில் செய்வது புதிதல்ல; எதிர் கொள்ள வேண்டி புதுப் புது நடவடிக்கை எடுக்கும் மேல் வர்க்க பிரதிநிதி மனைவியும் புதிதல்ல; ஒரு கட்டத்தில் இதையறிந்த கணவன், மனைவியை மீட்க வேண்டி பழி வாங்கத் துடிப்பதும் புதிதல்ல. ஆனால், இவையெல்லாம் கோர்த்து ஸாலிடாய் திரைக்கதை அமைத்திருப்பது புதிது; சுவாரஸ்யமானது.

'காக்க காக்க' ஜீவன் தான் வில்லன்; எப்படிப்பட்டவன் என்பதை முதல் காட்சியிலே விவரித்திருப்பது பளிச்; அஸால்டாய் படம் நெடுக வந்தாலும், நடிப்பின் பல்வேறு பாணிகளை காட்டியிருப்பது புன்னகைக்க வைக்கிறது; சில இடங்களில் கை தட்டவும். பாஸ்போர்ட் விசாவை பறிகொடுத்து, அழுது கொண்டே ·போனில் கெஞ்சி, பின் சிரித்து கழுத்தறுக்கும் போது...'சபாஷ் ஜீவா!'

நீண்ட நாட்களுக்குப் பின் மாளவிகாவுக்கு சூப்பர் ரோல்; மேல் வர்க்க பிரதிநிதியாய் அம்மணி வளைய வரும்போது இயல்பாய் இருக்கிறது; கணவனுக்கு அடங்கி நடித்து, நண்பனான அப்பாஸிடம் உறவு கொள்வது, ஜீவனிடம் கெஞ்சுவது என்று ஸ்கோப் அதிகம். இருந்தாலும் இவ்வளவு 'தாராளம்' தேவைதானா? (ஹி..ஹி..!)



கணவனாய் மனோஜ் K ஜெயன், நண்பனாய் அப்பாஸ், வாட்ச்மேனாய் சார்லி, ஜீவனின் காதலியாய் சோனியா அகர்வால் (அழுகை மூஞ்சியிலிருந்து, அழகு முகமாய் மாறியிருக்கிறார்; நீச்சல் உடையில் வரும்போது நமக்கே கூச்சமாயிருக்கிறது!), ஜீவனின் நண்பர்கள் என ஒரு பட்டாளமே வந்து போயிருக்கிறது.

''வைடு ஆங்கிள்' ரவிஷங்கரின் கேமரா சினிமாவுக்குப் பிள்ளையார் சுழி' என்ற ஆ.வி.யில் படித்ததை (திருட்டு) விசிடியில் பார்க்கும்போது அவ்வளவாகத் தெரியவில்லை; மே பி, தியேட்டரில் காசு கொடுத்துப் பார்த்தால் தெரியுமோ என்னவோ?!

எடிட்டிங், இசை, ரீரெகார்டிங் என எல்லாமே கச்சிதம். 'சின்னப் பயலே' பாணியில் 'திருட்டுப் பயலே' எழுதியிருக்கும் கவிப்பேரரசுவுக்கு ஒரு ஷொட்டு.

மிகச் சாதாரணமாய்த் துவங்கி முகத்தில் அறையும் ·ப்ளாஷ்பேக் சூப்பர்; எந்த ஒருவனும் தானாய்க் கெடுவதில்லை என்பதை அருமையாய்க் காட்டியிருக்கிறார்கள்; அதையே இறுதியில் ஜீவன் நினைத்துப் பார்ப்பதாய் வைத்திருப்பது சூபர்ப்!

மணிரத்னம் அஸிஸ்டெண்ட் சுசி.கணேசனின் மூன்றாவது படம் இது; விரும்புகிறேன், ·பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே என கதைக் களத்தை வித்தியாசமாய் அமைத்ததில் குருவுக்குப் பெருமை சேர்த்து விட்டார்.

சினிமாவுக்குப் புதுசு புதுசாய் கதை பண்ண முடியாது; என்றாலும் பழசை புச்சாய் காட்ட முடியும் என்கிற வகையில் 'திருட்டு பயலே'வை ரசிக்க முடியும்.

No comments: