Sunday, September 13, 2009

எவ்ளோ நாளாச்சு தரமான தமிழ் த்ரில்லர்/க்ரைம் படம் பார்த்து?

நகர குடியிருப்பு ஒன்றில் கொலையான ரம்யா (சிந்து மேனன்) வழக்கில், முன்னாள் காதலர் என்கிற முறையில் அழைக்கப்படுகிறார் ஏஸிபி வாசுதேவன்(ஆதி). பிரிவைத் தாங்க முடியாத துயரத்தில் தகப்பன் (ராஜசேகர்), தங்கை திவ்யா (சரண்யா மோகன்), கணவன் பாலா (நந்தா); நிச்சயம் தற்கொலையாயிருக்க முடியாது என்கிற ஒரே காரணத்தில் வாசு, வழக்கை தூசி தட்டத் துவங்க, அடுக்கடுக்காய் அதே குடியிருப்பில் மரணங்கள் விழத் துவங்குகின்றன. எல்லாவற்றிலும் 'தண்ணீரும் ஈரமும்' பிரதானமாய் இருக்கிறது! யார்தான் செய்திருப்பார்கள்?!

நிச்சயம் இது ஒரு இயக்குனர் படம் என்பதை முதல் பாதியில் அவ்வப்போது பின்னோக்கிப் போகும் 'ரம்யா-வாசு' காதல் காட்சிகளும், பின் பாதியில் ஒரேடியாய்க் காண்பிக்கப்படும் 'ரம்யா-பாலா' தாம்பத்யக் காட்சிகளும் நிரூபணம் செய்கின்றன. 'சென்னையில் ஒரு மழைக்காலம்' சரி, படத்தில் 'சென்னையில் ஒரே மழைக்காலம்' எப்படி ஸார்?! எல்லாக் காட்சிகளிலும் ஈரத்துடன் தொடர்பேற்படுத்த ப்ரயத்தனப்படுவதும் சுவாரஸ்யமே.

ஆதி இயல்பான காவல் அதிகாரியாய் மனதைத் தொடுவதென்னவோ சத்தியமான நிஜம். அதே போல, 'புரியாத புதிர்' ரகுவரனுக்குப் பின், சந்தேகப்படும் கணவன் பாத்திரத்தில் பட்டையைக் கிளப்புகிறார் நந்தா!

படத்தின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். த்ரில்லர் படங்களில் வரும் இசையைப் போல அல்லாமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல். எடிட்டரும் கொஞ்சம் வேலை பண்ணியிருந்தால் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க முடியும்.

காதல்/வெயில்/இம்சை அரசன்/அறை எண்/கல்லூரி என்கிற 'வெற்றி' வரிசையில் 'ஈரம்' சேரும்போது நமக்கு "தன்னால் எடுக்கப்பட முடியாத படங்களை வேறு இயக்குநர்(கள்) வைத்து திரு ஷங்கர் எடுக்கிறாரோ?!" என்கிற சந்தேகம் வலுக்கத்தான் செய்கிறது!


எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி! ஷங்கர் பட்டறையிலிருந்து மற்றுமொரு பட்டை தீட்டப்பட்ட வைரத்திற்கு வழி விடவும்!

No comments: