Sunday, December 06, 2009

கவிதை என்ன செய்யவேண்டும்?

இந்தியா தனது ஜனநாயகத்தை விரயம் செய்து கொண்டிருப்பதைப் போல நம் கவிஞர்கள் கவிதையைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கவிதை என்ன செய்யவேண்டும்?

வாழ்க்கையையும் மொழியையும் அர்த்தமுள்ளதாக்க வேண்டும். சமூகத்தையும் சக மனிதர்களையும் காதலிக்கக் கற்றுத்தரவேண்டும். மரபின் மீது பெருமிதமும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் ஏற்படுத்த வேண்டும்.

கவிதைகள், தலையில் அணியும் மகுடமோ, காலில் குலுங்கும் கொலுசோ அல்ல.

அவை நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள சாவிகள். நம்மை நாமே திறந்து பார்க்க, சமூகத்தை அதன் மீது பூட்டப்பட்டுள்ள விலங்குகளில் இருந்து விடுவிக்க, எதிர்காலத்தின் புதிர்களைத் திறக்க நம்மிடம் ஆசீர்வதித்துக் கொடுக்கப்பட்டுள்ள சாவிகள்.

கவிதை என்பதுதான் என்ன? அது வார்த்தைகளின் வடிவம் மட்டும் அல்ல. இலக்கணம் கொண்டு இயற்றப்ப்டுவதோ, அறிவைக் கொண்டு அமைக்கப்படுவதோ அல்ல. அது காதலைப்போல ஒரு மனம் சார்ந்த உணர்வு. இலக்கணத்துக்குள்ளே இருந்துகொண்டும் இயங்கலாம். விலங்குகளை உடைத்துக்கொண்டு விடுதலையாகியும் பறக்கலாம். ஆனால் அதற்குள் மனம் இருக்கவேண்டும்.

கவிதை என்பது குழந்தையின் சிரிப்பு; மேதையின் பிழை; இளைஞனின் கோபம்; நடுவயதுக்காரனின் நம்பிக்கை. கிழவனின் ஆன்மீகத் தேடல்.

இவை எல்லாவற்றின் பின்னாலும் இருக்கிறது பொய்கள் அற்ற ஒரு மனம். அது கவிமனம்.

-சொல்லாத சொல், மாலன், கிழக்குப் பதிப்பகம்

1 comment:

Vidhoosh said...

நல்ல பகிர்வுங்க. நன்றி.
-வித்யா