Sunday, August 15, 2010

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வருடம் 1931 - செங்கற்பட்டு

பால் பிரண்டன் என்கிற ஆங்கிலேயர் பூமாலைகள், பழங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு வேங்கடரமணியுடன், ஸ்வாமிகள் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.

ஒரு மூலையில் மங்கலான விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கின் நிழலில் அதிக உயரமில்லாத காஞ்சி மாமுனி அவர்களின் உருவத்தைக் கண்டார். பிறகு தயக்கத்துடன் நெருங்கி தாம் கொண்டு வந்தவைகளை ஸ்வாமிகளின் முன்னிலையில் சமர்ப்பித்து வணங்கினார். பிறகு பிரண்டனும், ஸ்வாமிகளும் உரையாடத் துவங்கினர்.

உலகத்தின் தற்கால ராஜீய நிலைமையும், பொருளாதார நிலைமையும் எப்பொழுது சீர்படும் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?

நிலைமை திருந்துவது என்பது சுலபமாகவும் வேகமாகவும் நடைபெறக்கூடியதல்ல. அது காலக்கிரமத்தில்தான் நடைபெற வேண்டும். பெரிய நாடுகள் ஒவ்வொரு ஆண்டிலும், மக்களை அழிக்கும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் ஏராளமான பொருளைச் செலவிட்டுக் கொண்டிருக்கும்போது எவ்விதம் உலகம் சீர்திருந்த முடியும்?

உலகில் ஆயுத ஒழிப்புப் பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றனவே! அதனால் ஏதாவது பயன் ஏற்படுமா?

உங்கள் சண்டைக் கப்பல்களை உடைத்து எறிந்தாலும், இயந்திர பீரங்கிகளைத் துருப்பிடிக்கச் செய்தாலும் அவையொன்றும் சண்டையை நிறுத்தச் செய்யாது. கையில் கம்புகளை ஏந்தியாவது மக்கள் சண்டையிடுவார்கள்.

அப்படியானால் உலகம் சீரடைய என்னதான் வழி எனத் தாங்கள் எண்ணுகிறீர்கள்?

ஆன்மீகத் துறையில் ஒரு நாடு மற்றொரு நாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்விதமே முதலாளிகள் ஏழைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் ஒருவருக்கொருவர் நல்லெண்ணம் ஏற்படும். இவ்விதம் எண்ணம் ஏற்படுவதனால், உண்மையான சமாதானமும், தேசங்களுக்கு நன்மையும் உண்டாகும்.
தற்சமயம் உலகில் பெருகியிருக்கும் அமைதியின்மையையும், அக்கிரமங்களையும் கவனிக்கும்போது, கடவுள் மக்களைப்பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் இருக்கிறாரோ என நினைக்க வேண்டியிருக்கிறதல்லவா?

அவ்விதம் நினைப்பதற்கில்லை. பொறுமையுடன் இருப்பவன், எதிர்காலத்தை ஆழ்ந்த சிந்தனையுடன் பார்ப்பான். கடவுள் மனிதன் உருவத்திலேயே தோன்றி, ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தச் சிக்கல்களையெல்லாம் சீர்படுத்துவார். பெரிய சாம்ராஜ்யங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் சச்சரவுகளும், மக்களின் அதர்மச் செயல்களும், கோடிக்கணக்கான ஏழைகளின் கஷ்டங்களும், எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகின்றனவோ, அப்போதுதான் ஒரு மாறுதலுக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். தெய்வீக சக்தி வாய்ந்த மனிதன் ஒருவன் உலகில் அப்பொழுது தோன்றுவான். இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் அந்த மனிதன் மூலம் ஒரு முடிவு ஏற்படும். எந்த நாட்டிலும் இவ்வித மஹா புருஷன் தோன்று மக்களைக் காப்பாற்றலாம். பௌதிக சாஸ்திரத்தின் நியதியைப் போல, இந்த மாறுதல் உலகில் படிப்படியாக ஏற்படும். மக்களது நாத்திகக் கொள்கையாலும், தன்னை உணராததாலும் எவ்வளவு வேகமாகத் துன்பங்கள் பரவுகின்றனவோ, அவ்வளவு வேகமாகவே உலகத்தைக் காப்பாற்றவும் கடவுள் சக்தியுடன் இந்த மனிதன் தோன்றுவான்.

ஆகையால், நமது காலத்திலேயே கூட அத்தகைய மனிதன் அவதரிப்பான் எனத் தாங்கள் நினைக்கிறீர்களா?

ஆம். எங்கள் நாட்டிலேயே அவ்வித அவதார புருஷன் தோன்றலாம். இந்த அவதாரத்துக்கு இப்பொழுது அவசியமும் ஏற்பட்டுவிட்டது. உலகில் அஞ்ஞான இருளும் அதிகமாகப் பரவியிருக்கிறது.

உலக மக்கள் இப்பொழுது மிகவும் கேவலமான நிலையை அடைந்துவிட்டதாகத் தாங்கள் கருதுகிறீர்களா?

இல்லை. ஒவ்வொரு மனிதனது இதயத்திலும் ஆத்ம சக்தி நிறைந்திருக்கிறது. அந்தச் சக்தி அவனை முடிவில் கடவுளிடம் கொண்டு போய் விடுகிறது.

மேல்நாடுகளில் இப்பொழுது மனிதனது இதயத்தில் பிசாசு அல்லவோ புகுந்திருக்கிறது? அவர்கள் செயல்களும் அவ்விதம்தான் இருக்கின்றன. இவ்விஷயத்தில் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மனித வர்க்கத்தைக் குறை கூற வேண்டாம். தாம் பிறந்த சூழ்நிலைக்கேற்ப அவரகள் நடந்து கொள்கிறார்கள். உண்மையில் எவரும் அவ்வளவு மோசமானவர்களல்லர். சந்தர்ப்பங்களை ஒட்டியே அவர்கள் மோசமாக நடந்து கொள்ளும்படி நேரிடுகிறது. இவ்வுண்மை மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் சமமாகவே இருக்கிறது. உலகெல்லாம் ஓர் உயர்ந்த கொள்கை பரவ வேண்டும். இன்று நாம் பார்ப்பதும் அனுபவிப்பதும்தான் உண்மை என்னும் எண்ணத்தை மனிதன் மாற்றிக்கொண்டு, மனித சக்திக்கு மேல் ஒரு தெய்வ சக்தி இருக்கிறதென்பதை அவன் உணர வேண்டும். அப்பொழுதுதான் உலகத்தில் துன்பங்களுக்கெல்லாம் ஒரு முடிவு காணலாம்.

ஆகையால் தாங்கள் மனித உலக வாழ்க்கையிலேயே தெய்வீகத்தைப் புகுத்திவிடலாம் என்று நினைக்கிறீர்களா?

ஆம். அது சாத்தியமானது என்றே நான் கருதுகிறேன். அதுதான் எல்லோருக்கும் முடிவு காலத்தில் திருப்தியை அளிக்கும். அப்பயனும் எளிதில் மறைந்துவிடாது. தெய்வீக சக்தி வாய்ந்த மனிதர்கள் எவ்வளவுக்கெவ்வளவு உலகில் அதிகமாகத் தோன்றுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு உலகில் இந்த எண்ணம் சீக்கிரமாகப் பரவும். தெய்வத் தன்மை வாய்ந்த மகான்களைப் பாரததேச மக்கள் மதிப்புடன் நடத்தி வருகிறார்கள். அதுபோல் உலகில் மற்றெல்லாத் தேசங்களும் நடந்து, அந்த மஹான்கள் காட்டும் வழியைப் பின்பற்றுவார்களேயானால், உலகெல்லாம் அமைதியும் சிறப்பும் பெற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை. இப்பொழுது நன்மை தீமை இவை இரண்டும் உலக முழுவதும் பரவியிருக்கின்றன. இனிப் பிறக்கும் சந்ததியார் அவர்களின் (ஆசிய-ஐரோப்பிய) நாகரீகத்தின் உயரிய கொள்கைகளைக் கடைப்பிடித்து, சமுதாயத்தின் சீரிய மக்களாக விளங்குவார்கள் என நான் நம்புகிறேன்.

-பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு, பாகம் 1, அல்லயன்ஸ் பதிப்பகம்

No comments: