Sunday, October 03, 2010

எந்திரன் - ஒரு அனுபவம்!

உன்னிப்பாகக் கவனித்தால், எந்திரன் கதையில், ஆளவந்தான் 'மொட்டை'யின் அட்டகாசம், ராவணன் 'சீயான்' ஐஸ்வர்யாவைச் சிறைப்படுத்திய சாயலையும் காணலாம். இந்த இரு படங்களும் மக்களுக்குத் திருப்தியைத் தரவில்லை என்பது கண்கூடு. ஆனால், எந்திரன்?

எந்திரன் ஷங்கர் ஏனைய படங்களைப் போலச் சாதாரணமாய்த் துவங்குகிறது. வசீகரன் நேரத்தைச் செலவிட்டு, காதலைத் துறந்து, ஒரு எந்திரனைப் படைப்பது பத்து நிமிடங்களில் சொல்லப்பட்டு விட, துவங்குகிறது 'சிட்டி'யின் அப்பாவித் துடுக்குத்தனங்கள்! காவலருக்கு 'வெட்டு'வது, குப்பத்தில் சட்டென 'காளி' அவதாரம் எடுப்பது, சனாவுக்கு நவீன முறையில் 'சொல்லி'க் கொடுப்பது, ரயிலில் 'சுத்தி, சுத்தி' அடிப்பது, கருணாஸ் / சந்தானம் 'வெறுப்பேற்றுவது', கொசுவைத் தேடிச் செல்வது, பர்த்டே பார்ட்டிக்கு 'ஸ்டைலாய்'ச் செல்வது எனச் சிட்டி நம் மனதைக் கொள்ளை கொள்வது இங்குதான்! இங்குதான், சுஜாதாவையும் நம்மால் மறக்கமுடியவில்லை!

இவ்வளவு இருந்தும், சிட்டியைத் தலைமை நாயகர் போரா நிராகரிக்க, துவங்குகிறது வசீகரனுக்குச் சவால்கள்! எப்படியும் சிட்டியை 'மனித'னாக்கியே விடுவது என முயற்சித்து, வெற்றியும் பெற்றபின், மிகப் பெரிய 'சோதனை' வசீகரனுக்கு வருகிறது! சோதனையில் 'சிட்டி'யை வசீகரன் அழித்துவிட, போராவிடம் அடைக்கலமாகும் 'சிட்டி' படு சுட்டியாகி, கெட்டுப்போய், சிட்டியைக் கலக்குகிறான், வசீகரனையும் வெல வெலக்கச் செய்கிறான்! எப்படித்தான் தந்திர எந்திரனை எதிர்கொள்கிறார் வசீகரன்?



ரஜினி என்கிற காந்தம் படம் முழுவதும் மூன்று வேடங்களில் நம்மை ஈர்க்கிறது. கமல், ஷாரூக் என்கிற பிற கலைஞர்களிடம் சொல்லப்பட்ட கதையை எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, 'அரிமா'வில் சவாரி செய்திருக்கும் மகத்தான கலைஞனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

ஐஸ்-ரஜினி ஜோடி புதுசாகவும், இளமையாகவும் 'காதல் அணுக்கள்' பாடலில் இருப்பதை மறுக்க முடியாது. அதே போல 'அரிமா அரிமா'வின் கம்பீரமும் கூட. ஐஸ¤க்குப் பாடல்களில் வேலை அதிகம். ஏனைய நேரங்களில் குறைந்த ஆடைகள்(ஹி!ஹி!).

ஏ ஆர் ரெஹ்மான் பாடல்களை முதலில் கேட்டபோது அவ்வளவாக சுவாரஸ்யமாயில்லை தான். ஆயின், பாடல்களைத் திரை வடிவில் கொண்டு வரும்போதும், ரஜினி-ஐஸ¤டன் காணும்போதும், ஒற்றிக் கொள்ளும் ஒளிப்பதிவில் காணும்போதும் 'எங்கேயோ' போய்விடுகின்றன.

படத்தின் ஹைலைட் ரத்னவேலு. மனிதர் 'உழைத்திருப்பது' நன்றாகத் தெரிகிறது. நிசம்மாவே ரத்னவேலு இல்லையென்றால் இரு வருடங்களில் எடுத்திருக்க முடியாதுதான் போலும்! இதே போல, ஸ்டண்ட், ஹைடெக் காட்சிகள் என எல்லாவற்றிலும் நேர்மை இருப்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.

'சிவாஜி'க்குப் பிறகு ரஜினி என்னதான் செய்யமுடியும் என்கிற கேள்விக்குறியை, ஆச்சரியக் குறியாக்கியிருக்கும் இயக்குநரை எப்படிப் பாராட்டுவது?! 'Hats Off' ஷங்கர்! - வேறென்ன சொல்ல?!

எந்திரன் திரைப்படத்தை 'என் பார்வை'யில் அடக்கிவிட முடியாதுதான். ஏனென்றால், எந்திரன் நமக்கு, தமிழ் சினிமாவுக்கு, இந்திய சினிமாவுக்கு ஒரு அனுபவம்.