Sunday, August 21, 2011

என்றும் சுஜாதா - 1

படிக்குமுன், சில வார்த்தைகள்...எனக்கும் இசைக்கும் 'அவ்வளவாக' சம்பந்தம் இல்லை. படத்தைப் பற்றிய 'என் பார்வை'-யில் கூட, பாடல்களைத் தொட்டு விட்டுத்தான் போவேன். பாடல்களின் வரிகளை ரசிக்கத் தெரிந்த அளவிற்கு, இசை / பாடகர்கள்-ஐப் பற்றித் தெரியாது. இந்த நேரத்தில் எனக்குத் தெம்பு கொடுத்து 'எழுதுங்க தல, உங்களால முடியும்' என்று எழுதவைத்த திரு மோகன் அவர்களுக்கு நன்றி பல. தொடர்ந்து எழுதி, இனிமையான முடிவைக் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தவரும் அவர்தான்.

சுஜாதா என்கிற பெயருக்கும் தமிழ் / சினிமா-வுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.

சுஜாதா என்கிற பெயரில் திரு ரங்கராஜன் எழுத்தில் துவங்கி, வசனம் / திரைக்கதையில் முத்திரை பதித்தது..
சுஜாதா என்கிற பெயரில் அறிமுகமாகி, 'பெண்மை'க்குத் தனி அந்தஸ்தைத் திரையுலகத்திற்கு தந்து, கோலோச்சிய நாயகி..

எனத் 'தமிழ்' இவர்களை நிரந்திர சரித்திர / இலக்கிய / சினிமா ஏடுகளில் தக்க வைத்துக்கொண்டது.

காலன் இவர்களைத் தத்தெடுத்துக் கொண்டாலும், தமிழுக்கு 'சுஜாதா' பெயர் மீது கொண்ட மோகம் ஏனோ குறையத்தான் இல்லை. இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில்...ஒரு படி மேலே போய் 'தமிழ்', இன்னுமொரு 'சுஜாதா'வைக் கொணர்ந்தது.

ஆம். 'சுஜாதா' என்கிற பெயர் கொண்டு, தனது தேனினிய குரலால் இன்றும் சினிமா இசைப் பிரியர்களைக் 'கட்டு'க்குள் வைத்திருக்கும் 'பின்னணிப் பாடகி' எனும் மந்திர ராணிக்கு இந்தத் தொகுப்பு ஒரு சிறிய முயற்சி, அர்ப்பணம்.

ஒரு சிறிய 'சுஜாதா' முணுமுணுப்போடு துவங்குவோமா?!

சுஜாதா வாழ்க்கையில் நெறைய ஆச்சர்யங்கள்...

-இரணடு வயதில் தந்தையைப் பறி கொடுத்தது..
-ஏழு வயதில் 'பாட்டு'-ப் பணியை துவக்கியது
-பத்து வயதில் திரு கே ஜே யேசுதாஸ் அவர்களோடு மேடையில் இணைந்து பாடியது
-பதினோராவது வயதில் மலையாள சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியது
-ஹிந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்றிருப்பது
-ஃபினிக்ஸ் பறவையாய் எழுந்து, தமிழ் சினிமாவை 'ஆளுமை'ப் படுத்தியது

என சுஜாதா வாழ்க்கையில் நெறைய அதிசயங்கள் உண்டு.

கொச்சி கலபாவனில் சேர்ந்து, பயின்ற சுஜாதாவிற்கு பாடுவதென்றால் அவ்வளவு விருப்பம். ஏழு வயதில் சரளமாய்ப் பாடுவது சாமான்யமா என்ன? பாட்டுப் போட்டிக்குத் திரு யேசுதாஸ் அவர்கள் தலைமை என்றவுடன் 'குஷி' தாங்கவில்லை குழந்தைக்கு. 'பாடி'க் காட்டலாம் என்றிருந்தவளுக்குப் பேரதிர்ச்சி. கலாபவன் நடத்தும் போட்டி என்பதால், அதன் உறுப்பினர் என்கிற வகையில் 'சுஜாதா' பாட முடியாதாம்! அழுகை பொத்துக் கொண்டது...பார்த்தார் யேசுதாஸ். 'வீட்டுக்கு வரேன், பாடிக் காண்பியேன்' என்றார். வந்தார்...பின்பு என்ன?

சரித்திரம் எழுதப்பட்டது. இசைக் குழுவில் இணைத்துக் கொண்டார். திரு யேசுதாஸ் அவர்களுக்குச் சமமாய், இசைக் குழுவில், மேடையில், ஜோடிப் பாடல்களை சுஜாதா பாடிய போது...நம்புங்க அய்யா...வயது பத்துதான்!

'திரு எம் கே அர்ஜுன் அவர்கள் இசையில், 'டூரிஸ்ட் பங்களோ' (மலையாளம்) படத்தில் 'கண்ணெழுதி பொட்டுதொட்டு' தான் நான் பாடிய முதல் பாடல். அப்போது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன்!' என்று சுஜாதா பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, சுஜாதா வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்.

இந்தப் பாடலை வலைத்தளத்தில் தேடித் பார்த்தும் கிடைக்கவில்லை. படிக்கும் அன்பர்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தது எப்படி? அதற்கும் யேசுதாஸ் அவர்கள்தான் காரணம் என்கிறார் சுஜாதா. ராஜா அவர்கள் 'பார்வை'-ல் பட்ட அடுத்த நாள் பாடுவதற்கான வாய்ப்பு....படத்தின் பெயர்...சுஜாதாவிற்குப் பொருத்தமான பெயர் 'கவிக்குயில்'! குயிலின் கானம்...இதோ துவங்கி விட்டது!
Ghazal பாணியில் அமைந்திருந்த பாடலை சுஜாதா ரொம்பவும் அருமையாகக் கையாண்டிருப்பதைக் கண்டு எனக்கு வியப்பு. ஹிந்துஸ்தானி இசையில் அப்போதே தேர்ச்சி இருந்ததா என்பதற்கான தகவல்கள் இல்லை. என்ன காரணங்களினாலோ, பாடல் படத்தில் இல்லை.

சுஜாதா அயரவில்லை. ராஜாவும் விடவில்லை. வாய்ப்பு 'காயத்ரி' வடிவத்தில் வந்தது. முதலிரவை அனுபவித்த பெண்ணின் அடுத்த நாளைய நெகிழ்வான மன நிலை அது....பாடலின் முன் 'ஹம்மிங்', கொஞ்சம் இளமை, மீதம் முதிர்ச்சி என்கிற அளவில் பாடி அசத்தினார். பதின்மூன்று வயதுச் சிறுமிக்கு மீறிய பாட்டு அது.

'இந்த ராகம்'தான், இல்லையில்லை 'ராகமே' இல்லை என ராகப் பிரியர்கள் முட்டி மோதிக்கொள்ளும் ராஜாவின் பாட்டுக்களில் ஒன்று. அதுவும் அதிகாலையில் கேட்டுப் பாருங்கள்! லயித்துப் போவீர்கள்!


இனி வரும் பாடலுக்கு அறிமுகம் வேண்டுமா என்ன? 'எஸ் ஜானகி' என்றேன்...நண்பர் மோகனோ 'தல! நான் கூட ஜெஸ்ஸி-யோன்னு நெனச்சேன்' என்றார்!

பாடலின் முன் ஹம்மிங் (மீண்டும்!), கொஞ்சமாய் மழலை தொனித்த குரலில் 'இசையை அணைத்து'ச சென்றதை யாரால் மறக்க இயலும்?!


'ஒரு இனிய மனது' -ல், இசை ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் 'இளவரசி' சுஜாதா.

நான் ஒரு ஒற்றுமையை இந்தப் பாடல்களில் கவனித்தேன். மூன்றின் நாயகி / வாயசைப்பு ஸ்ரீதேவி. வெவ்வேறு நிலைகளைக் கொண்ட பாடல்கள் இவை. 'டீன்'களில் இருக்கும் சிறுமி, அதற்கேற்பப் பாடியிருப்பது மிகவும் ஆச்சர்யம் / வியப்பு.

மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டு, கொஞ்சம் கூட 'வாசனை' வராமல் சுஜாதா முதலில் பாடிய மூன்று தமிழ் பாட்டுக்கள் அவரை இமயத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அது நடந்ததா?

-பயணம் தொடரும்

2 comments:

mohan said...

நான் எப்பொழுது ரகுமானின் இசையை ரசிக்கத் துவங்கினேனோ, அன்றே சுஜாதா அவர்களின் குரல் மீது அளவில்லா காதல். ஆனால் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருவதற்கு முன்பு, இந்த இசை இளவரசியை நம்மில் பல அன்பர்களுக்கு அறிமுகம் கிடையாது. நேற்று இல்லாத மாற்றம் ஒன்று சுஜாதாவின் வாழ்வில் நடந்தது. அது என்னவென்று அடுத்த பதிப்பில் பருப்பு ஆசிரியர் அவர்கள் பதிய வைப்பார்!

Raghavi said...

AWESOME
Really its a great and interesting thing.. You proved to be endeavour:). One of my friend also liked your new approach,and appreciated your hardwork behind this blog. Hats off for doing this in our mother tongue itself.. I just got surprised and its interesting too.. waiting eagerly for the next issue:)