Sunday, September 11, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 19


9/11-க்கு உலகம் தலை குனிந்து மௌனம் அனுஷ்டித்து வரும் மதிப்பிற்குரிய இவ்வேளையில்.... இந்திய அன்பர்கள், முக்கியமாக சுதந்திர வேட்கை, தமிழ் பற்று கொண்டவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்றுண்டு....

'அது என்ன?' எனக் கேட்கும் அன்பர்களுக்கு அலுக்காமல் பதில் சொல்ல எனக்குப் பொறுமையும் உண்டு.

பதினான்கு ந(ண்)பர்கள் மட்டுமே கலந்து கொண்ட 'கவிதை'யின் மரண நாளை... எல்லோரும் நினைவில் வைத்திருப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு என்றுமே இருந்ததில்லை.... நம்மையெல்லாம் தட்டி எழுப்பி, தானும் சுதந்திர கனவு கண்டு, காணி நிலம் வேண்டி 'நெஞ்சில் உரமே' இல்லாத மனிதர்களுக்காக வாழ்ந்த முண்டாசுக் கவிஞன் 'சுப்ரமணிய பாரதி' அவர்களின் நினைவு நாள் இன்றுதான்.

கள்ளைக் கடலமு தை - நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொ லவே
பிள்ளைப் பருவத்தி லே - எனைப்
பேணவந் தாளருள் பூணவந் தாள்.

என்று கலைமகளைப் பேணுவார்....

பத்துப் பனிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;- நல்ல
முத்துச்சுடர் போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்;- அங்குக்
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்;- என்றன்
சித்த மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்!

என்று கனவினில் மூழ்கித் திளைத்திடுவார்...

உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்
வீணருக் குழைத்துடலம் ஓயமாட்டோம்

என உரக்க முழங்கிடுவார்....

சாத்திரங்க ளொன்றுங்காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தைநம்பியே
கோத்திரம்ஒன் றாயிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்;
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;
ஆத்திரங்கொண் டேயிவன்சைவன் - இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார்.

என மனம் புழுங்கிடுவார்...

அவரது பாடல்களை அனுபவிப்பதோடல்லாமல், அவர் காட்டிய வழியில் சிறிதேனும் நடக்க முயற்சி செய்தால்...அதுவே இந்தியாவின் வலிமைக்கு வழி வகுக்கும்...!

1 comment:

தக்குடு said...

பாரதியின் நினைவு இந்த தடவை மூஞ்சி புஸ்தகத்தில் முழங்கியது!! எனக்கு(ம்) அவனிடம் காதால் உண்டு!!