Thursday, October 20, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 28

நமக்குத் தலைவலி வருகிறது - சூடான காஃபி, தேனீர், எலுமிச்சைத் தேநீர், மாத்திரை, குளிர்ந்த காற்று - கொண்டு விலக்க முயற்சி செய்கிறோம். வலி நீங்கிய பின் இதமாய் உணர்கிறோம். ஆனால், அடிக்கடி வலி வந்தால்...பொறுக்க முடியாமல் போனால்? ஆம். மருத்துவரிடம் நம்மை ஒப்படைத்து, நன்றாகப் பரிசோதனை செய்யச்சொல்லி, அவர் தரும் ஆலோசனைகளின் பேரில் பத்தியமோ, மாத்திரையோ உட்கொண்டு, சிகிச்சை மூலம் நோயைப் போக்கிக்கொள்கிறோம்.

'அக உலக (inner self) உண்மைகள்' உணர்தல் கூட. வெறும் நூல்களைப் படிப்பதனாலோ, சில பாசுரங்களை இசைப்பதனாலோ, சிலர் பேசுவதைக் கேட்பதனாலோ அறிந்துவிட முடியாது. இவற்றை அனுபவித்து அறிந்த, ஆன்மாவை உணர்ந்த, இறைவனை நேரில் கண்ட 'குரு' என்கிற மருத்துவராலேயே தெளிய வைக்கப்பட்டு, குணப்படுத்த முடியும். , ஆக, ஆன்மீக வாழ்க்கைக்கு, அக வாழ்க்கைக்கு, அழிக்க முடியா அடையாளம் 'குரு'.

தேர்வு எழுதுபவனின் மன நிலை எப்படி இருக்கும்? ஆழ்ந்த அறிவு, அமைதி, சுறுசுறுப்பு, இலக்கை எட்டும் வைராக்கியம், மணித்துளிகளுக்குள் முடிக்க வேண்டிய சாதுரியம் - தேவைதானே?

இதையே வாழ்க்கைக்கும் ஒப்பிடலாம். 'காலாவதி தேதி' தெரியாது பிறந்து விட்டோம். உலகச் சூழலில் சிக்கி, மையப் பொருளை மறந்து, இலக்கறியாது வாழ்வதா வாழ்க்கை? ஆன்மீக வாழ்க்கைக்கான இலக்கை அடைய முயற்சிக்க வேண்டாமா? அதற்கான தேடுதலைத் துவங்க வேண்டாமா? 'தகுந்த குரு' இல்லை எனும் போது மனம் பதற வேண்டாமா?

'குரு' எல்லா மதத்திற்கும் உரியவர், அதற்கும் அப்பாற்பட்டவர். உலக வாழ்க்கைக்கு மேலான உயரிய வாழ்வு / ஆன்மீக வாழ்வுக்கான முதல் தேவை 'தகுந்த குரு'. குருவிடமிருந்து பெற்ற உண்மைகளை, நன்கு ஆராய்ந்து, உணர்ந்து நமதாக்கிக் கொள்ள வேண்டும்.

சென்னை பெங்களுரு பயணம் செல்ல - பேருந்து, கார், ரயில், விமானம் - பல வழிகள் உள்ளன. எதுவாயிருந்தாலும் இலக்கை அடைய 'ஓட்டுனரின்' உதவி தேவையாயிருக்கிறது. ஓட்டுனர் சரியில்லை என்றால் இலக்கைத் தொட நேரம் அதிகமாகலாம். தொட இயலாமலேயே போகலாம். அதனால், தகுந்த குருவை கவனத்துடன் தேர்ந்தெடுப்பது மிக மிக அவசியம். தெரிவு செய்த பின் ஓட்டுனர் மீது நம்பிக்கை வைத்து, அவர் கையில் வாகனத்தைக் கொடுப்பது போல, குருவை அறிந்த பின் நம்பிக்கையுடன் - எவ்வித ஐயமும் இன்றி - நம்மை ஒப்படைத்து விடவேண்டும்.

முடியுமா நம்மால்?

கட உபநிடதம் (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு) - 'அக'த்தை அறிந்து கொள்ள முதலில் குருவை தேடு; பின் அவரை நாடு; நம்பிக்கை வை; உணர்ந்து கொள்; ஆன்மாவை அறிந்து கொள் - என இதைத்தான் கூறுகிறது.

கடோசி - 1
என்னடா 'பக்தி கஃபே'வை 'அப்டி போடு' ஆக்கி புட்டானேன்னு பாக்கறீயளா? பரதேசியோட தாட்ஸ் அப்டி தான் போவும்னு நெனக்க வேண்டாம். கொஞ்சம் இப்டியும் யோசிப்போமேன்னு நெனச்சு போட்ட பதிவு தான் இது! இதுக்கு தோதா 3 நிமிஷ கீதைப் பாடம் போடுறேன்...

No comments: