Monday, October 24, 2011

பரதேசி டைரிக் குறிப்பு - 30

பதிவிற்கான வித்து எதில் துவங்குகிறது? எது நம்மை எழுதத் தூண்டுகிறது? அபத்தங்களைப் படித்து வாய்விட்டு சிரித்தேன். உதாரணம் : “நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன் - வாலி”என்கிற வரிகளில் முரண்பட்டதால் இந்தப் பதிவு...

எடுத்துக்கொண்டிருக்கிற தலைப்பை விவரிக்க, விவாதிக்கக் கூடிய அளவிற்கு எனக்கு பக்குவம் போதாது. குச்சிகளைச் சேகரித்து கூடு கட்டும் குருவி போல, பல பேரறிஞர்களின் பார்வைகளை இங்கு உலவ விட்டு, உங்களைச் சிந்திக்க செய்வதே என் நோக்கம். இதனால் கட்டுரை போன்று அமைந்து விடக்கூடிய அபாயம் உண்டு. அதனால், முடிந்த வரை படிக்கும்படி தரும் ஒரு முயற்சியும் கூட உண்டு.


விக்கி பார்வையில்...

கற்பு என்பது ஒரு திருமணம் ஆன பெண் அவளது கணவனைத் தவிர வேறு யாருடனும் உடலுறவு கொள்ளாத நிலையைக் குறிக்கும்.

தமிழ் இலக்கியத்திலும் சூழலில் கற்பு வலியுறுத்தப்படுகிறது. மணவிலக்கு மறுமணம், விதவை மணம், திருமணத்துக்கு முன் அல்லது அப்பாலான பாலியல் நடத்தைகள் போன்ற சமூக கூறுகள் கற்பு என்பதை கேள்விக்குட்படுத்தியிருக்கின்றன.


திருவள்ளுவர் பார்வையில்...

திருவள்ளுவர் பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட கற்புக்கோட்டைப் பதிவு செய்துள்ளார். குடும்பத்தில் இல்லத்தில் உள்ள பெண்களுக்கு மரபுகளை வலியுறுத்தி உள்ளதைக் குறள்வழிக் காண முடிகிறது. திருவள்ளுவர் காட்டும் பெண்மை மரபைப் பின்பற்றும் பெண்மையாகவே அமைந்துள்ளது.

வள்ளுவர் மட்டும்தான் கற்பு என்பது பெண்களுக்கானது மட்டும்தான். கற்புடைய பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறியிருக்கிறார்.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின் ---(குறள் 54 )

இல்வாழ்வில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால் அம் மனைவியை விட வேறு செல்வம் கிடையாது.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் - - - (குறள் 56)

கற்புநெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை - - - (குறள் 55)

கடவுளை வழிபடாது கணவனைத் தொழும் பெண் பெய் எனக் கூறின் மழை பெய்யும் என்பது கற்பு பற்றிய நடைமுறை விளக்கம்.

இதைப் பற்றிய ஈ வெ ரா அவர்களுடைய கருத்து

குறளில் வாழ்க்கைத் துணை நலத்தைப் பற்றிச் சொல்ல வந்த அத்தியாயத்திலும், பெண்வழிச் சேரல் என்பதைப் பற்றிச் சொல்ல வந்த அத்தியாயத்திலும், மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத் தன்மையும், தாழ்ந்த தன்மையையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணக்கிடக்கின்றன. தெய்வத்தைத் தொழாமல் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழுகின்றவள் மழையைப் பெய் என்றால் பெய்யும் என்றும், "தன்னைக் கொண்டவன்" என்றும் இம்மாதிரியான பல அடிமைக்குகந்த கருத்துக்கள் கொண்ட வாசகங்கள் காணப்படுகின்றன. இவ்விஷயத்தில் மாறுபட்ட அபிப்பிராயம் கொள்ளுவோர் மேற்கண்ட இரண்டு அத்தியாயங்களையும் 20 குறளையும் உரைகளைக் கவனியாமல் மூலத்தை மாத்திரம் கவனிக்கும்படி வேண்டுகிறேன். அப்படிப்பார்த்த பிறகு இந்த இரண்டு அதிகாரங்களும் அதாவது, "வாழ்க்கைத் துணைநலம்" அதிகாரமும், "பெண்வழிச் சேரல்" அதிகாரமும் குற்றமற்றது என்பதாக யார் வந்து எவ்வளவு தூரம் வாதிப்பதானாலும் கடைசியாக, திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறளை எழுதியிருப்பாரானால் இம்மாதிரிக் கருத்துக்களைக் காட்டியிருப்பாரா? என்பதையாவது கவனிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.


பாரதி பார்வையில்...

“கற்பென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்"
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதி.

கற்பு என்பது பெண்ணுக்கானது மட்டுமல்ல. மாறாக, இருவருக்குமானதுதான் என்பது பாரதியின் வாதம். பாரதி,
ஈ வெ ரா இருவருமே ஆண், பெண் என்ற இரு இனத்தவருக்குமே சமமான நீதியைப் போதிக்கின்றனர்.

இதைப் பற்றிய ஈ வெ ரா அவர்களுடைய கருத்து

உண்மையாகப் பெண் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து, இருபிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுதுகொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள் சட்டங்கள் மாயவேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.


எடுத்துக்கொண்ட தலைப்பு எனை 'மூச்சு' வாங்க வைத்ததில், கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு பின்னால் தொடர்கிறேன்...!


ஒரு முக்கியமான 'கடோசி' குறிப்பு...

அவ்வையார் பார்வையில்...

“கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை’ என்றார் அவ்வையார். அவ்வையார் கற்பு என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் கருத்தையே விடுத்து கற்பு என்பதற்குப் புதிதான பொருளையே தருகிறார். கற்பு என்பது வாக்கு தவறாமை; சொன்ன சொல்லை மாற்றிப் பேசாமை என்று விளக்கம் கொடுக்கிறார்.

இது எனக்கு ஆச்சர்யம் தான்...எனக்குத் தெரியாத அவ்வை மூதாட்டியின் வரிகள் இவை. ஆழமான வரிகளும் கூட. கவிஞர் வாலி அவர்கள் எழுதியதை அவ்வையாரின் பார்வையில் பார்க்கும்போது பொருந்தக்கூடியதாயும், ஏற்புடையதாயும் உள்ளன.

ஆக, போகிற போக்கில், பொத்தாம் பொதுவாய் எதையும் சொல்லிவிட்டு போவது ஆழ்ந்த அறிவாளர்களுக்கு அழகல்ல. எது அபத்தம்? வரியா, எழுதியவரா, பொருளா, நட்பா, கற்பா, எண்ணுதலா இல்லை இருபது வருடங்களா? எழுதியவருக்கும், பின்னூட்டம் போட்டவருக்கு இவைகளை விவாதிக்க இயலாது...'கற்பு என்றால் என்ன?' பற்றிய கேள்விக் கணை மட்டுமே என் முன் தொடுக்க முடிந்தது வருந்தத்தக்க விஷயம்.

இப்படி ஒரு பதிவை எழுதும் துணிவைத் தந்த இவர்களுக்கு என் சிரந்தாழ்ந்த நன்றி...

நான் தமிழன் முகப்புத்தகம் - வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும். . .

தமிழ் ஓவியா வலைப்பூ - பெரியார் பார்வையில் கற்பு

திரு பெ சக்திவேல் அவர்கள், உதவிப் பேராசிரியர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம் - தற்காலப் பார்வையில் திருக்குறள்

1 comment:

N.H. Narasimma Prasad said...

கற்ப்பை பற்றி மிக அழகாவும், விளக்கமாகவும் தொகுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.