Sunday, April 01, 2012

வளைபட்டகை மாதொடு..

’மாமி’ பொறந்தாத்துக்குப் போய் வாரம் ஒன்றாகப் போகிறது.  விஷ்ணுவும்.

(1. மாமி எனும் அக்ரஹாரச் சொல் பெரும்பாலும் ‘மனைவி’ என்கிற பொருளைக் கொண்டாலும், சில கெட்ட பசங்க ‘ஆண்ட்டி’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் அ(ன)ர்த்தமாய்ப் பயன்படுத்துவர். 

2. நீங்கள் நினைப்பது போல எனக்கும் ’மாமி’ அவர்களுக்கும் கருத்து வேறுபாடு வராது - அவர்கள் கருத்தே என் கருத்தாய் அமையும்போது இது எப்படிச் சாத்தியம்?!

3. பொறந்தாம் எனும் அக்ரஹாரச் சொல் ‘அம்மா/அப்பா வீடு’ என்பதைக் குறிக்கும்)

அமெரிக்காவில் சமைஞ்சு (மன்னிக்கவும்...எழுத்துப் பிழை!’) பழகியதை இங்கே புதுப்பிக்க வேண்டிய கட்டாயம்.
 
வெண்டை / உருளை / வாழை/ காரெட் எனப் பொரியல்கள் பிடிபட்டாலும், இன்னும் சாம்பார் / ரஸம் பக்கம் போகவில்லை.

இட்லி மாவு, பருப்பு/கொத்துமல்லி பொடி, புளிக்காய்ச்சல், கொத்துமல்லி துவையல், கொஞ்சூண்டு வற்றல் குழம்பு என ஓரளவுக்குச் செய்து, வை(த்)து விட்டு (?!) போனாளோ, நானும் சிவாவும் பொழைத்தோம்!

(4. கொஞ்சூண்டு எனும் அக்ரஹாரச் சொல் ‘கொஞ்சம்’ எனப் பொருள் படும்.  ‘துளியூண்டு’ / ‘துக்களியூண்டு’ என்றும் சொல்வர்)

சேர்ந்தே இருக்கும்போது சங்கடமாயும், பிரிந்த முதல் சில நாட்களில் சந்தோஷமாயும், அப்புறம் அவர்கள் ‘நெனப்பா’யுமே இருப்பதுதான் கணவர்கள்/தந்தையர்களின் நிலை.

ஆனால், எனக்கு அவர்கள் போன முதல் நாளே ‘நெனப்பா’ வந்திட்டுது! (அட! நம்புங்க ஸார்!  ஏப்ரல் ஒன்றையும் இதையும் முடிச்சுப் போடாதீங்க ப்ளீஸ்)

‘மாமி’ கிட்டயும் சொன்னேன்.  நம்புவாங்களா? ’ஜனகராஜ் மாதிரி ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’னு குதிக்கிற ஆசாமி நீங்க, இந்தக் கதையெல்லாம் வேணாம்னு’ நச்னு பதில் வந்த்து.

‘அடியேய்!  இருக்க முடியலைடி!’ன்னு சொன்னதுக்கு ‘அது சரி! ஒம்பொது மாசம் பிரிஞ்சு எப்படி இருந்தீங்களாம்? என்னிய நம்பச் சொல்றீங்களா?’னு இன்னுமொரு குத்து!  அட ராமா! என்ன மாதிரி ‘கவுண்டர்’ அட்டாக்?!

(5. இது இங்கிலிபீசு ‘counter’பா நீங்க எதையோ நெனச்சு, கோயமுத்தூர் ஆளுங்ககிட்ட போட்டு கொடுத்து, ஜாதிக் கலவரமா மாத்திடாதீங்கங்ணா!)

இந்தப் பக்கம் ‘மாமி’யும், அந்தப் பக்கம் ‘விஷ்ணு’வும் பிய்த்துப் பிடுங்காத வாழ்க்கை என்ன வாழ்க்கை அப்பூ?  வேஸ்ட்!

கந்தரநுபூதி பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.


வளைபட் டகைம்மா தொடுமக் களெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ

‘வளைபட்ட கை’ என்றால் கைகளில் வளையல்களை அணிந்து கொண்டுள்ள என்று பொருள்.  மாது என்றால் மனைவி.  மக்கள் என்றால் குழந்தைகள்.  இன்னும் வீடு, வாசல், மாடு முதலியவைகளெல்லாம்.

‘தளை’ என்றால் விலங்கு.  அநுபூதிக்கு மனைவி தடை அல்ல.  மக்கள் தடை அல்ல.  அவர்களே ‘உயிர்’ என்று எண்ணிக்கொண்டிருக்கும் எண்ணம்தான் தடை!

இந்தத் தளைகள் பட்டு அழியத் தகுமோ தகுமோ என்கிறார்!

(நன்றி: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி அவர்கள்)

பாடல்களை எடுத்து ஆள்வதும், சொல்வது சுளுவாய்த்தான் இருக்கிறது.  ஆனால், நிஜ வாழ்க்கையில் ‘உயிரை’ப் பிய்த்துக்கொண்டு போனது போல வலிக்கிறது.

மனைவியை, மக்களை விட்டுப் பிரிந்து ’வாழும்’ அனைத்துப் பெரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.  வாழ்க்கையை வாழத்தெரியாமல், எதையோ சேமித்து வைப்பதாய் நினைத்துக்கொண்டு, மகிழ்ச்சியை, ஆனந்தத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பவர்கள். 

உண்மையைச் சொல்லுகிறேன். உங்களை அவர்களுடன் இணைத்துக்கொண்டால் மட்டும் ‘முழுமை’ கிட்டும். 

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க்கையை வாழத்தெரியாமல், எதையோ சேமித்து வைப்பதாய் நினைத்துக்கொண்டு, மகிழ்ச்சியை, ஆனந்தத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Mahi said...

Oh..you are back in India-va editor sir? :)

Nice post..it's true to live away from family is a hell.