Sunday, February 10, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 40

பில் ரிக் ஸ்ட்ரீட் கெஸ்ட் ஹவுஸிலிருந்து, லோதியான் ஸ்ட்ரீட் அலுவலகம் இரண்டரை மைல் தூரம் இருக்கலாம். போய் வர நகரப் பேருந்துகள் உண்டு. 15 நிமிடப் பயணம். ஆக, எடின்பரோ நகரத்தின் முக்கிய அம்சம் லோதியான் பேருந்து.

பெங்களூரு வோல்வோ, வாயு வஜ்ரா வகைப் பேருந்துகள் சிசிடிவி / டபுள் டெக்கர் பட்டையைக் கெளப்பிக்கொண்டு, மழலைத் துடிப்புடன் அங்குமிங்கும் வழுக்கிக் கொண்டு ஓடுகின்றன.






லோதியான் ஸ்ட்ரீட் கிளையில் பஸ் பாஸுக்கு விண்ணப்பித்ததில், வெப் கேமிரா முன் நிற்க வைத்து, ‘சுளீர்’ எனப் ஃபோட்டோ எடுத்து, 4 வாரத்துக்கு 51 பவுண்டு + 3 பவுண்டு ரிஜிஸ்ட்ரேஷன் வசூலித்து, கையில் ஐடி கார்டு/பாஸைச் சுடச்சுடக் கொடுத்து விட்டார்கள். 4 வாரங்கள் முடிந்தவுடன், ப்ரீபெய்ட் மொபைல் போல டாப் அப் செய்து கொள்ளலாமாம்.

1 பவுண்டு 40 பென்ஸ் கொடுத்தால் ஒரு வழிப் பயணம். மூன்றரை பவுண்டுகள் கொடுத்தால் நாள் முழுதும் பயணம். தவிர வாரப் பாஸ்களும் உண்டு.




1919-ல் துவங்கி, எடின்பரோ நகரத்தோடு வளர்ந்து, 2000 பணியாளர்களில் 1500 ஓட்டுனர்களைக் கொண்ட லோதியான் பேருந்து நிறுவனம் மக்களோடு ஒன்றாகக் கலந்து விட்டது என்றால் மிகையல்ல.

என் போன்ற வண்டி ஓட்டுதலையே புறக்கணித்த ஜந்துக்களுக்கு இது போன்ற பேருந்து அமைப்புகள் லட்டு போல. தின்னத் தின்ன ஆசைதான் அதிகமாகும்.

No comments: