அவ்வப்போது வேறு மொழிகளிலும் புதுமுகங்களைப் போட்டுத் தெகிரியமாகப் படம் எடுக்கிறார்கள். லீடர் (தெலுகு) படமும் இதில் சேர்த்தி.
முதல் அமைச்சரான தந்தை (சுமன்) படுகொலை செய்யப்பட, அமெரிக்க வாசியான மகன் அர்ஜுன் (ராணா தக்குபதி, புதுமுகம்) இந்தியா வர நேரிடுகிறது. தந்தையின் கடைசி ஆசையான ‘மகனே! நீ முதல்வராக வேண்டும்’ என்கிற ஒன் லைனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தனியாக அரசியல் சாணக்கியங்களை ராணா எதிர் கொள்ளுவதுதான் கதை. ஆக, அரசியல் சாகசங்கள் நிறைந்த லீடரின் முதல் பாதி விறு விறு. பின்பாதி தொ..ங்..கு..கி...ற..து!
முதல் படத்திலேயே ராணா தக்குபதிக்கு வெய்ட் ரோல். தாக்குப் பிடிக்கிறார் என்பதுதான் ஆச்சர்யம். அமெரிக்க அமுல் பேபி எப்படி அரசியல் சாக்கடைகளைச் சுத்தம் செய்ய முடியும் என்கிற கேள்விக்குறியைத் திரைக்கதை குறி வைத்தடிக்கிறது.
சுமன், சுஹாஸினி, கோட்டா சீனிவாச ராவ், சுப்புராஜு, பிரியா ஆனந்த், ரிச்சா கங்கோபாத்யா (மயக்கம் என்ன), ஹர்ஷ வர்தன் என்று பட்டியல் நீள்கிறது. இரண்டாம் பாதிக்குப் பின்னால் வரும் ரிச்சா, முதல் ஸீனிலிருந்து வரும் கோட்டா மனதில் நிற்கிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை நேர்த்தி. இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் வெள்ளைப் புடவையில், மழையில் நனைவித்துப் பாடும் டிபிக்கல் தெலுகு கனவுப் பாடல்கள் வைக்காதது ஆச்சரியம்.
ஷேகர் கம்முலா (டாலர் ட்ரீம்ஸ், ஹேப்பி டேஸ், கோதாவரி புகழ்) இயக்கத்தில் லீடர் த்ரில்லர், டைம் பாஸ். இப்படியாவது நடந்தால் இந்தியா நல்லாருக்குமே என்கிற ஃபாண்டஸி வகைப் படம்.
ஆச்சரியம், தமிழ்ப் பதிப்பை யாரும் கோராதது. முதல்வனைப் போல் இதில் நடிக்கக் கொஞ்சம் ‘தில்’ வேண்டும். தமிழ்த்திரை ஹீரோக்கள் திரையில் காண்பிக்கும் சாகசங்களைக் கொஞ்சம்...இம்மாதிரிப் படங்களில் நடிப்பதன் மூலமும் காட்டலாம்.
No comments:
Post a Comment