Sunday, February 17, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 44

’இந்தியன் ருப்பி’ - சிறந்த மலையாளப் படம் (2011) என்கிற தேசீய விருது. சிறந்த துணை நடிகர் (திலகன்) என்கிற ரிப்போர்டர் விருது.





ரியல் எஸ்டேட் தரகரான ப்ருத்விராஜ் ‘கொஞ்சம்’ பணம் பண்ண ஆசைப்பட, அது சிறைவாச அருகாமையில் போய் முடிவதுதான் கதை. கடோசி அரைமணி நம்மை அல்லாட வைத்து, வியர்க்க வைத்து, நாயகன் ப்ருத்விராஜ் செய்யும் நம்பக்கூடிய சாகசங்கள் படத்தின் பலம். இறுதிக் காட்சியில் அதையே மனிதாபிமானியாகக் காட்டுவது ஒண்ணாங்கிளாஸ்.

இடைச்செருகலாய் வரும் திலகனின் பாத்திரம் கதையின் போக்கை மாற்றிச் சொல்கிறது. நாலு நாள் நரைத் தாடி, கறுப்பு ப்ரேம் கண்ணாடியுடன் திலகன் சேட்டர் செய்யும் அட்டஹாசம் படம் முழுதும் இருக்கிறது. முதியவர் வேடத்தில் கச்சிதமாய்ப் பொருந்தி, இளைஞர்கள் மத்தியில் உலாவி, நம்பிக்கை கொடுத்து, ஏற்றி விட்டு, இறந்து போகும் திலகன் படத்தின் உயிர்நாடி.

ப்ருத்விராஜ் தரகர் பாத்திரத்தில் அதகளம் செய்கிறார். படத்தின் வசனங்கள் மெருகூட்டுகின்றன. ரிமா கலிங்கல் ஹீரோயின் ரொம்பவே இளமை (ஹி..ஹி!). நண்பராய் வரும் டினி டாம் அடக்கி வாசித்துச் சுவை சேர்ப்பது இதம். ஜகதி கல கல.

ஷாஹாபாஸ் அமன் இசை, பாடல்கள் மென்மை. எஸ் குமார் ஒளிப்பதிவில் கோழிக்கோடு சுண்டியிழுக்கிறது.

ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்தியன் ருப்பி படத்தை ‘சுளுவாய்ப் பணம்’ பண்ணத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.

No comments: