சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ...கிளியே! செம்மை மறந்தாரடி...!
என்று பாரதியார் வருத்தத்தை அப்படியே ராஜ்குமார் பாரதி பாடியதை எல்லோரும்
கேட்டிருக்கலாம். பயணத்தின் போது அறிமுகமான நபரின் துன்பத்தினைக் காணச்
சகியாமல், ஓடிப் போய் உதவி செய்யும் சாதாரண மனிதனின் கதை ‘பாஸஞ்சர்’ (2009, மலையாளம்).
அடுத்த நாள் விடுப்புக்கு வேண்டி ஓவர் டைம் செய்யும் சத்யநாதன் எர்ணாகுளம்
- குருவாயூர் பாஸஞ்சரில் இரவு தனியே பயணம் செய்ய நேரிடுகிறது. ரயிலில்
தினம் பயண்ஞ் செய்யும் சத்யநாதன் அப்படியே தூங்கிவிடுவார். கூட சீட்டாடும்
நண்பர்கள், அவரை விழிப்பித்து, நெல்லாயி ஸ்டேஷனில் இறக்கி விடுவார்கள்.
நள்ளிரவு, களைப்பு கலந்து, நெல்லாயி ஸ்டேஷனைத் தவறவிடுகிறார். குருவாயூர்
சேருமுன் முழிப்பு வருகிறது. சக பயணி வக்கீல் நந்தனுடன் சுமூகமில்லாத
அறிமுகம் ஏற்படுகிறது.
குருவாயூர் ஸ்டேஷனில் நந்தனை வழியனுப்பி
விட்டுத் திரும்பும்போதுதான் நந்தன் கடத்தப்படுவதைப் பார்க்கிறார்.
காரணம், அவனது மனைவி சேனல் தொகுப்பாளினி அனுராதா கையில் சிக்கிய முக்கிய
துருப்பு..! எப்படி இருவரை மீட்கிறார் என்பது கதை.
சீனிவாசன்
(கதை பறயும் போழ்) நாயகன். வண்டி பிடித்து, பிரயாணித்து, வேலை செய்து,
சாயாப்பொடி வாங்க மறந்து, இரவு வீடு திரும்பி, விரும்பிய சேனலைப் பார்க்க
முடியாமல் போகும் நம்மைப் போல அப்பிராணி குடும்பத் தலைவன். சூப்பர் சீனி!
திலீபன், மம்தா ஜோடி - பொருத்தம். நடிப்பும் இயல்பு. படம் முழுக்கக்
கட்டப்பட்டு கிடக்கும் நாயகனாக நடிக்க நெஞ்சில் ‘மஞ்சா சோறு’ வேண்டும்.
அது திலீபனுக்கு இருக்கிறது. பதட்டச் சூழலிலும் மம்தா அழகு :-)
ஓட்டுனர் பாத்திரத்தில் வரும் நெடுமுடி வேணு புன்னகைக்க வைக்கிறார். வில்லனாக ஜகதி, ’கௌரவ’மாய் மது நன்றாய்ச் செய்திருக்கிறார்கள்.
இரவில் துவங்கி, அடுத்த இரவில் முடியும் பாஸஞ்சரில் திரில்லருக்கான எல்லா
அம்சங்களும் உண்டு. பாஸஞ்சர் என்கிற பெயரை வைத்தாலும் படம் எக்ஸ்பிரஸ்
வேகத்தில் போகிறது :-)
கதையின் இறுதிக் காட்சி மனமுள்ள
அனைவரையும் நெகிழச் செய்யும். ஏதேனும் நல்லதைச் செய்ய தூண்டும் - அறிமுக
இயக்குநர் ரஞ்சித் ஷங்கருக்கு சபாஷ்!
கொசுறுச் செய்தி - தமிழில் கவிதாலயா ‘முறியடி’ என்கிற தலைப்பில் எடுக்கிறார்களாம். சத்யராஜ் ஏற்றிருப்பதாக்த் தெரிகிறது.
No comments:
Post a Comment