Saturday, June 29, 2013

கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள் - 1

    ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
    ஒரு மனிதன் வாழ்வைக் கொடுமை என்றான்

என்று கண்ணதாசன் அமைக்கவில்லை.


இப்படி அமைந்திருந்தாலும், அது இராகத்திற்கோ,  தாளத்திற்கோ தகராறு செய்யவில்லை; ஒத்துத்தான் போகிறது.  வேறு யாராயிருந்தாலும் இப்படித்தான் வார்த்தைகளை அமைத்திருப்பார்கள்.


ஆனால் கண்ணதாசனோ

    ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
    ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

என அமைத்திருக்கிறார்.  இப்படி அமைத்ததின் மூலம் சொல்லும் அவர் சொல்லும் கருத்து, நம் மனதில் ஒரு மாறுதலை உண்டாக்குகிறது.


’அதுவே கொடுமை என்றான்’ என்பது, வாழ்வைக் கொடுமை என்றான் என்கிற பொருளைத் தருவதுடன் ‘அவன் நல்லாயிருக்கானே, அதுதான்யா கொடுமை’ என்ற பொருளையும் தருகிறது.


இதைக் கண்ணதாசன் தெளிவாக உணர்ந்ததினால்தான் ‘வாழ்வைக் கொடுமை என்றான்’ என்று எழுதாமல், ‘அதுவே கொடுமை என்றான்’ என்று எழுதினார்.


இப்படி அடுத்தவன் வாழ்க்கையைப் பொறுக்காமல், அதைக் கொடுமை என்று சொன்னதைக் கேட்டவுடன், ‘என்ன இது, மனிதர்கள் இப்படி பொறாமை கொண்டவர்களாக இருக்கிறார்களே?’ என்று கடவுளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.


உடனே சிரித்துவிட்டாராம் கடவுள்!

கருத்துக்கு நன்றி : கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள், பி என் பரசுராமன், அல்லயன்ஸ் பதிப்பகம், ரூ 90

சாந்தி நிலையம் என்கிற படத்தில் அமைந்த இந்தப் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
    கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

    ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
    ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
    படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்

    கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
    காசும் பணமும் ஆசையும் யார் தந்தது
    எல்லையில்லா நேரம் நிலமும் நான் தந்தது
    எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
    இறைவனுக்கே இது புரியவில்லை
    மனிதரின் கொள்கை தெரியவில்லை

    பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
    பச்சை குழந்தை சிரிப்பில் தன்னை கண்டானாம்
    உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பை கண்டானாம்
    உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்

No comments: