Saturday, June 29, 2013

கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள் - 2

அந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.

’விக்’எனப்படும் செயற்கை முடி தரிப்பு, புருவங்களில் அடங்கும் பெரீய்ய மூக்குக் கண்ணாடி, பைஜாமா, ஜிப்பா, மேலே அரைகுறையாய் அங்கவஸ்திரம் (அ) ஷால்... இல்லையில்லை ஏதோ ஒன்று.  அருகிலேயே பேரிளம் வயதில் தங்கை.  ஐம்பது வயது ‘திருமணம்’ ஆகாத அண்ணன், முப்பது வயது ‘திருமணம்’ ஆகாத தங்கையை நோக்கிப் பாடுவதாக அமைந்த பாடல்.  பார்க்க நேர்ந்தால் உடனே சேனலை மாற்றிவிடுவேன். பாசமலர் படத்தில் ‘மலர்களைப் போல்..’ பாட்டமைப்புக்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்.  சிவாஜியின் வயது உட்பட :-)

இந்தப் பாடலை ‘கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள்’ புத்தகத்தில் ‘பி என் பரசுராமன்’ (அல்லயன்ஸ், ரூ 90) அவர்கள் விளக்கம் அளித்தது கண்டு வியந்து போனேன்.  ‘சே! காட்சிக்காகப் பாடலை இதுவரை கேட்காமல் போனேனே!’ என வெட்கப்பட்டேன்.மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை
பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்புத்துணை தேடி நான் த‌ருவேன்


திருமணம் என்றவுடன் நினைவிற்கு வருவது மங்கலகரமான தாலி, மஞ்சள், குங்குமம்-தான்.  அதனால்தான், தங்கைக்குக் கல்யாணப் பேச்சைத் துவங்கு முன் கவிஞர் ‘பொன்வண்ண ரதம் ஏறி’ என்கிறார்.  இதில் மஞ்சள் / தங்கம் எல்லாம் அடங்கிவிட்டதாம்!


’சொக்கேசன் போல அழகான மாப்பிள்ளையைக் கொண்டு வர வேண்டுமா?’ அண்ணன் கேட்கிறானாம்.

தோகை மீனாள் பூவையானாள்
சொக்கேச‌ன் துணையோடு ஊர்கோல‌ம் போனாள்
மாலை க‌ண்டாள் கோவில் கொண்டாள்
மாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள்
தென்றல் தொட்டு ஆட‌
கண் சங்கத்தமிழ் பாட
தன் மக்கள் வெள்ளம் கூட
காவல் கொண்டாள்


மதுரை சம்பந்தமான சொற்களைக் கொண்டே வரிகள் அமைத்த அழகை என்ன சொல்ல?


தங்கையோ மௌனம் காக்க,


’நீ யாரையாவது விரும்புகிறாயா ஆண்டாளைப் போல?’என்கிற பொருளில்

சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள்
சுட‌ராக‌ என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள்
கன்னித்தமிழ் தேவி மைக்கண்ணண் அவ‌ள் ஆவி
தன் காத‌ல் ம‌ல‌ர் தூவி மாலையிட்டாள்


பாடி, ஆண்டாள் திருக்கல்யாணத்தை நினைவூட்டுகிறார் கவியரசர்.


தமிழை ஆண்டாள் என்கிற வரிகள் நோக்கத் தக்கவை.  திவ்யப் ப்ரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களிலும் தமிழுக்கு உரிய எழுத்தான ‘ழ’ என்பதை அதிக அளவில் உபயோகித்தவள் ஆண்டாள்தான்!

கன்னித்தமிழ் தேவி
மைக்கண்ணன் அவள் ஆவி
தன் காதல் மலர் தூவி...

அடடா! கலக்கிட்டே கண்ணதாசா!

இதில் சூசக பொருளொன்றும் உண்டு.  மீனாட்சியைக் கை பிடித்த சொக்கேசர், வீட்டோடு மாப்பிள்ளையாக மதுரையில் தங்கி விட்டாராம்!  ஆண்டாள் திருக்கல்யாணத்திலோ, ஆண்டாள் புகுந்த வீடு போய்விட்டாள்.  ஆக, ‘வீட்டோடு மாப்பிள்ளையாய் பார்க்கட்டுமா?  இல்லை மாப்பிள்ளை வீட்டுக்குப் போகிறாயா?’ என்கிற கருத்தும் வருகிறது.


’திருமணத்திற்குப் பின் எப்படி வாழவேண்டும்?’என்று அண்ணன் சொல்ல நினைக்கும்போது, ராமகாதை நினைவுக்கு வந்து விடுகிறதாம்.

மாலை சூடி வாழ்ந்த‌ வேளை
வ‌ன‌வாச‌ம் போனாலும் பிரியாத‌ சீதை
ராம‌ நாமம் த‌ந்த‌ ராக‌ம்
லவ‌னாக‌ குசனாக‌ உருவான‌ கீத‌ம்

’முதல் இரு வரிகள் ராமர் பெயரே இல்லையே?’ என்று கேள்வி எழுப்புவோர்க்குப் பதில் இதோ.


வேளை என்பதற்கு மேம்போக்காய்ப் பார்த்தால் ’காலம்’ (காலை வேளை, மாலை வேளை) என்று பொருள் வரும்.  ஆழ்ந்து நோக்கினால், வேளை என்பதன் பொருள் மன்மதன் ஒத்த அழகுடைய ராமர் என்றும் பொருள் தரும்.


இனிதான் கவிஞரின் ‘ஃபினிஷிங் ட்ச்’ அபாரம்!


எல்லா சமூகத்திலும், தாய்க்கு அடுத்தபடியான ஸ்தானம் தாய் மாமனுக்கு உண்டு.  பிராமணர் அல்லாத சமூகத்தினரிடம் ‘தாய் மாமன்’-க்கு மதிப்பும் மரியாதை இன்னும் கொஞ்சம் அதிகம்..  அப்படிப்பட்ட தாய் மாமன் இவர்களுக்கு (மீனாட்சி, ஆண்டாள், சீதை) இல்லையே என்கிற குறையை ‘நான் இருக்கிறேன்’ என்று பொருள்பட கண்ணதாசன் எழுதும்போது நம் மனது சொக்கிப் போகிறது.

மாம‌ன் என்று சொல்ல‌ ஓர்
அண்ண‌ன் இல்லை அங்கு - அந்த‌
அண்ண‌ன் உண்டு இங்கே அள்ளி வ‌ழ‌ங்க‌

என்று பாடலை முடித்துத் தெய்வத் திருமணங்களை நம் முன் நிறுத்துகிறார் கவிஞர்.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைத்த அழகான பதிவு,...!பாராட்டுக்கள்..

JK said...

Nice one