Thursday, July 11, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 49

இராமனும், சுக்ரீவனும் செய்த கொண்ட ஒப்பந்தம்

-அண்ணன் வாலியை இராமன் வதைத்து, இராச்சியத்தைச் சுக்ரீவனுக்குக் கொடுப்பது.

-தன் படை கொண்டு சுக்ரீவன் சீதா பிராட்டியைத் தேடிக் கண்டு பிடிப்பது.

இராமன் தன் ஒப்பந்தத்தை நிறைவேற்றி விட, மழைக் காலமாதலால் தேடுவதற்கு அவகாசம் வேண்டுகிறான் சுக்ரீவன்.  இராமன் ஒத்துக் கொள்கிறான்.

மழைக்காலம் முடிகிறது. சுக்ரீவன் கொண்டாட்டங்கள் ஓயவில்லை.  குடி போதையில் கொடுத்த வாக்கையும், போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தையும் மறந்தே போகிறான்.

பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் சீதா பிராட்டி நினைவில் வர, பிரிவாற்றாமையும் சேர இராமனுக்குக் கோபம் வந்து விடுகிறதாம்.  ஒப்பந்தத்தை நினைவூட்ட இலக்குவனை அனுப்புகிறான்.

இலக்குவனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?  சீற்றத்தோடு வருகிற இலக்குவனை எதிர்கொள்ள வாலி மனைவியான தாரையை அனுப்புகிறானாம் அனுமன்.  ஏன்?

‘பெண்களைப் பார்த்த நிலையில் தரையில் கண் பதிப்பானாம் இலக்குவன்.  அப்போது அவனைச் சமாதானப் படுத்துவது எளிதாகிவிடும்!’ என்கிறானாம் அனுமன்.  என்னே மதி நுட்பம்.

அதே போல அமங்கலக் கோலத்தில் தாரையைப் பார்ததவுடன் (’மைந்த!’ என தாரை விளித்தபின்தான் அவளை நிமிர்ந்து பார்க்கிறானாம் இலக்குவன்.  கம்பன் நடை!), ’இப்படித்தானே என் தாயும் இருக்கிறாள்?’ எனத் தன் தாயின் நினைவு வந்துவிடுகிறதாம்.  அழுகிறானாம்.  என்ன ஒரு காட்சி?


மங்கல அணியை நீக்கி
கொங்கலர் கோதை மாற்றி
குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம்முலைகள் பூகக்
கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல்
நயனங்கள் பனிப்ப நின்றான்.

அப்படியே காட்சியை உறைய விட்டு, சற்று முன்னால் போவோம்.  இலக்குவனைச் சமாதானப்படுத்தத் தான் மட்டும் போகாமல்  கூடவே சில பெண்களையும் அழைத்துப் போகிறாள் தாரை.  பெண்களைக் கண்ட இலக்குவன் நிலைதான் என்ன?  அழகிய கம்பன் வரிகளில் இதோ.

தாமரை வதனம் சாய்த்து
தனு நெடுந் தரையில் ஊன்றி
மாமியர் குழுவில் வந்தானாம்
எனமைந் தன் நிற்ப

‘மாமியாருடன் கூடிய பெண்களிடம் சிக்கிய மாப்பிள்ளை போல’ என உக்கிரக் காட்சியிலும் கம்பனிடம் நகைச்சுவை இழையோடுகிறது.  இந்தக் காலத்தில் ‘நலங்கு’ சமயத்தில் மாப்பிள்ளை படும் அவஸ்தை தெரிந்ததுதானே?!!

புலவர் கீரன் அவர்களே! நன்றி உமக்குத்தான் ஐயா!
(கம்ப இராமாயணக் களஞ்சியம், வானதி பதிப்பகம், விலை ரூ 250)

1 comment:

JK said...

சூப்பர் டா ரங்கா கம்பராமாயணம் போல் ஒன்று என்று படித்தாலும் புதிது புதிதாய் கற்றுக்கொள்ள வைக்கும் அருமை ....
ஜேகே