Sunday, July 14, 2013

(ஓடும்) பரதேசி டைரிக் குறிப்பு - 50

எச்சரிக்கை# 4 : வெள்ளி, சனி கிழமைகளில் ப.டை.கு வெளிவராது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்   (மீதி மூன்று எச்சரிக்கைகள்? - அட! தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள் வாசகர்களே!)




புகழ் பெற்ற அந்த இந்திய வீரரின் பெயர் தெரியும்.  தங்கப் பதக்கம் ஹாக்கி விளையாட்டில் வாங்கியிருக்கிறார் என்று மட்டும் (தவறாக!) அறிந்திருந்தேன்.  அவரைப் பற்றி முழுமையாய்த் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வெள்ளி இரவு கிடைத்தது.



    -சுதந்திரத்திற்குப் பின் பிரிவினை காரணமாய்ப் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு அகதியாய் வந்தவர்

    -எல்லாரைப் போன்று தனக்கு உள்ளேயும், தனக்கு வெளியேயும் எப்போதும் போராடும் குணம் கொண்டவர்

    -எல்லா இளைஞர்களைப் போல இலக்கில்லாமல் திரிந்து, பெண் ஒருத்தியைத் தீவிரமாய்க் காதலித்து, பின் தோற்றவர் (நல்ல வேளை, கவிதையெல்லாம் எழுதவில்லை!)

    -இராணுவத்தில் சாதாரண சிப்பாயாய்ச் சேர்ந்தவர்

    -முழுக் கோப்பை பால், இரண்டு முட்டைகள் இலவசமாய்க் கிடைப்பதால் இராணுவ ஓட்டப்பந்தய தகுதிப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பத்தில் தேர்ந்தவர்

    -வெறுங் கால்களில் மானைப் போல, முயலைப் போல, சிறுத்தையைப் போல ஓடும் வல்லமை உடையவர்

    -படிப்படியாய்த் தீவிர முயற்சியில் முன்னேறி ஓட்டப் பந்தயங்களில் முதலாவதாய் வந்து, சாதனைகளை முறியடித்துப் பல இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்

    -தான் வென்றால் இந்திய நாட்டிற்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப் பட வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்தவர்

    -பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் அவர்களால் ‘பறக்கும் சீக்கியர்’ (The Flying Sikh) என்று பட்டம் பெற்றவர்

மில்கா சிங் என்கிற மாமனிதரைப் பற்றிய இந்திப் படம் 'ஓடு மில்கா ஓடு’ (Bhag Milkha Bhag) எடின்பரோ ஸினி வோர்ல்ட்-ல் பார்த்தேன்.  மூன்றேகால் மணித்துளிகள் வஞ்சனையில்லாமல் ஓடும் படம் ‘மில்கா சிங்’ அவர்களின் வாழ்க்கையை ரொம்பவே மெதுவாகவும், விரிவாகவும் காட்டுகிறது.  இரண்டாவது பாதியில் ஆவணப் படம் பார்ப்பது போல இருந்தாலும், சுவராஸ்யம்.

மில்கா சிங் அவர்களின் வாழ்க்கை சினிமாக் கதைகளைப் போலத்தான்.  அவரை நம் முன் நிறுத்தும் கடினமான பணியை ஃபர்ஹான் அக்தர் சிறப்பாய்ச் செய்திருக்கிறார்.  தில் சாஹ்தா ஹை, டான் (ஷாருக்கான்) போன்ற படங்களின் இயக்குநர், ராக் ஆன், ஸிந்தகி ந மிலி தோ பாரா போன்ற படங்களின் நடிகர் எனப் பன்முகம் இவருக்கு உண்டு.

படத்தின் மிகப் பெரிய பலம் துணை நடிகர்கள் தேர்வும் / நடிப்பும்.  மில்காவின் தமக்கையாய் வரும் திவ்யா தத்தா பல வித உணர்ச்சிகளை அநாயாசமாய்க் கையாள்கிறார்.  அக்கா-தம்பி பாசம் படங்களில் பார்த்து எத்தனை நாளாயிற்று?

திரைக்கதையில் தொய்வும், தொகுப்பில் (எடிட்டிங்) தூக்கமும் இருக்குமோ என்கிற ஐயம் பலருக்குப் படம் பார்க்கும்போது எழலாம்.  புகழ் பெற்ற ஒருவரைப் பற்றிய படம் எனும்போது, வியாபாரமும் ஆக வேண்டும் எனும்போது சமரசமும் நீளமும் தவிர்க்க முடியாதவை.

ஷங்கர்-எஸான்-லாய் மூவரின் இசை படம் முழுதும் ஒன்றிப் பயணிக்கிறது.   அதே போல பானு ப்ரதான் ஒளிப்பதிவும்.

ராகேய்ஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா கடினமான பணியைக் கையில் எடுத்துக் கொண்டு, கயிற்றில் நடந்திருக்கிறார்.  ஆனாலும், மில்கா சிங் என்கிற உன்னத மனிதரை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு சென்றமைக்காகச் சலாம் ஒன்றைத் தைரியமாகப் போடலாம்.

மொழி அறிதல் பற்றிக் கவலைப் படாமால் எல்லோரும் போய்ப் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.  உங்கள் வாழ்க்கையை இன்னும் செம்மையாய் வாழ்வதற்குப் படம் உந்துதலாய் அமையும்.

பின் குறிப்பு :

1. முன்னிருக்கையில் தந்தை மில்கா, மகன் மில்கா தலையில் டர்பனுடன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர் .  இடைவேளை போது ‘கவுன்’ அணிந்த நம் நாட்டு அம்மணி அவர்களிடம் வந்து பேசியதில், அம்மணியின் சரித்திரம் முழுக்கப் பத்து நிமிடங்களில் எங்களுக்கும் தெரிந்து விட்டது.

2. சிங் பார்த்தாகி விட்டது.  இனி சிங்-கம் 2 பார்க்க வேண்டும்.  செவ்வாயன்று இரவு 9.05 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது.  யோசித்துக் கொண்டிருக்கிறேன் :-)

3. சென்னை எக்ஸ்பிரஸ் வெள்ளோட்டம் பார்த்தேன்.  It confirmed my worst fears.  ஆகஸ்ட் 8 இங்கு(ம்) வெளியாகிறது. 

No comments: