Monday, July 15, 2013

(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51


தோழர் பாலா அவர்கள் கவியரசு / கவிப்பேரரசு அவர்களின் கற்பனை ஒன்றாயிருக்கிறது / நன்றாயிருக்கிறது என்று சிலாகித்திருந்தார்.  அதை இங்கு தந்திருக்கிறேன்.


வைரமுத்துவின் வைர வரிகள்:
(நினைவெல்லாம் நித்யா-ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்)

"வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்.
இலையுதிர்க் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்."
கண்ணதாசனின் "ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன? என் வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்" என்ற வரிகளுக்கு இணையானவை இவ்வரிகள்.

இது போன்ற இரண்டு பாடல்கள் என்னுள் கொஞ்ச நாட்களாய் உழன்று கொண்டிருந்தன. 



முதல் பாடல்:

’சட்டி சுட்டதடா’, ஆலயமணி படத்திற்காக கவியரசர் அவர்கள் எழுதியது.
  பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
  மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா..
  ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா..
என்று அனுபவத்தைப் பாடலின் வாயிலாக வெளியிட்டிருப்பார்.  அவ்வப்போது நம்மைத் தாக்கும் மிருகத்திலிருந்து காத்துக் கொள்ள வேண்டுமானால், நம்மிடையே இருக்கும் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  அப்படி வளர்த்துக் கொண்டோமானால், அவை நம் மனதில் இருக்கும் மிருகத்தை அடங்க வைக்க உதவும்.  நன்றாகக் கவனியுங்கள்...’அடங்க’ வைக்கத்தான் இயலுமே ஒழிய ‘அழிக்க’ இயலாது.  இதைக் கவிஞர் உணர்ந்ததால்தான் ‘அழிந்து’ என்கிற பொருளைத் தராமல் ‘அடங்கி’ என்கிற வார்த்தையை உபயோகிப்படுத்தியிருக்கிறார். 


’கடவுள் பாதி, மிருகம் பாதி’. ஆளவந்தான் படத்திற்காகக் கவிப்பேரரசு அவர்கள் எழுதியது.
கடவுள் பாதி, மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்...
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்...
கடவுள் கொன்று கடவுள் கொன்று
மிருகம் மட்டும் வளர்கிறதே...

கவியரசரின் கருத்தை ஒட்டியிருப்பது போலப் பாடல் துவங்கினாலும், நடைமுறையில் எல்லோராலும் அவ்வளவு எளிதில் பயில்வதற்கு ஏலாது என்கிற ரீதியில் பாட்டு அமைந்திருப்பது நோக்கத் தக்கது.


இரண்டாவது பாடல்:

’தாய்லாந்துக் கிளிகள்’, தாய்லாந்து பெண்களைப் பற்றிக் கவியரசர் அவர்கள்.
’பொன்னடங்கிய பெட்டகம்
கனிபோலடங்கிய மார்பகம்
மின்னடங்கிய மெல்லிடை
அதன்மே லடங்கிய ஆலயம்
....தன்னடங்கிய முனிவனும் மனம்
தானடங்குதில்லை காண்’*
*பாடலுக்கு நன்றி: கண்ணதாசன் - காலத்தின் வெளிப்பாடு, திரு பழ கருப்பையா அவர்களின் புத்தகம்.


படித்ததும் நமக்கு உடனே நினைவில் வரும் கவிப்பேரரசுவின் பாடல் வரிகள் இதோ...
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

பனிவிழும் மலர்வனம், ‘நினைவெல்லாம் நித்யா’ படத்தின் வரிகள் அந்நாட்களில் எத்துணை பேரை ‘அட!’ என்று புருவம் உயர்த்த வைத்திருக்கும்?

நம் எல்லோரையும் போல, திரு வைரமுத்து அவர்களுக்கும் திரு கண்ணதாசன் வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

இருவரின் கற்பனைகள் சிறகடித்துப் பறந்தாலும், சமயங்களில் ஒன்றாயிருப்பது காணும்போது வியப்பும், மகிழ்ச்சியும், ஆச்சரியமும் சேர்கிறது.

நன்றி, பாலா! நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்ததை எழுத வைத்தமைக்கு!

1 comment:

JK said...

Good one, there are lots more actually. When time permits will write...